திங்கள், 28 ஜனவரி, 2019

அரிசில்கிழார்


இவரது இயற்பெயர் தெரியவில்லை. அரிசில் என்ற ஊர் சோழநாட்டில் இருந்தது. இதே பெயரில் கொங்கு நாட்டிலும் இருந்துள்ளது. அரிசில் கிழார் கொங்கு நாட்டில் வாழ்ந்தவர். அரிசில் என்னும் ஊரின் தலைவர் இவர் என்பது இவர் பெயரில் இருந்து தெரிகிறது.  இவர் கபிலர் மற்றும் பாணர், பெருங்குன்றூர் கிழார்  ஆகிய புலவர்கள் காலத்தவர் என்று இவருடைய பாடல்கள் புற நானூற்றில் பேகன் குறித்துப் பாடியதால் தெரிகிறது.
பெருஞ்சேரல் இரும்பொறை அதியமான் ஆண்ட தகடூரை முற்றுகையிட்டுப் போர் செய்த போது இந்த புலவர் போர்க்களத்தில் இருந்து அந்தப்போர் நிகழ்வுகளை நேரில் கண்டவர். புலவர் பொன்முடியாரும் அப்போர் நிகழ்ச்சிகளை நேரில் கண்டவர்களில் மற்றொருவர். இவ்விருவரும் தகடூர்போரைப் பற்றி பாடிய செய்யுள்கள் தகடூர் யாத்திரை என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. தகடூர் யாத்திரை நூல் தற்சமயம் மறைந்துவிட்டது. ஒருசில பாடல்கள் புரத்திரட்டு எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சியின் மகனான எழினி, தகடூர்ப் போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து உயிர் நீத்ததை அரிசில்கிழார், எழினியின் வீரத்தை புகழ்ந்து பாடியுள்ளார். (புறம்: 230).
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் தமது உரையில் தகடூர் யாத்திரையிலிருந்து அரிசில் கிழார் எழுதிய செய்யுள்கள் சிலவற்றை மேற்கோள்கள் காட்டியுள்ளார்.
தகடூர்ப் போரில் வென்ற இரும்பொறை மேல் அரிசில்கிழார் பத்து செய்யுள்களைப் பாடியுள்ளார். (பதிற்றுபத்து – எட்டாம்பத்து). இதில் இரும்பொறையின் வெற்றிகள் மற்றும் நல்லியல்புகளைக் கூறியுள்ளார்.  அவற்றைக் கேட்டு மகிழ்ந்தவன் புலவருக்கு ஒன்பது லட்சம் பொன்னும், தன்னுடைய அரண்மனை மற்றும் சிம்மாசனத்தை பரிசாக வழங்கினான். புலவர் அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், அரசனுக்கு அமைச்சராக இருந்தார். இவைகளை பதிற்றுப்பத்தில் – எட்டாம் பத்துப் பதிகத்தில் அடிக்குறிப்பினால் அறிந்துகொள்ளலாம். இது, புலவர் வேறு எவரும் அடையாத பெருஞ் சிறப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக