திங்கள், 28 ஜனவரி, 2019

ஜெகந்நாதன் கோம்பை


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாளையம்புதூர் ஊராட்சிக்குட்பட்டது ஜெகநாதன் கோம்பை. இங்குள்ள மாரியம்மன் பள்ளம் என்ற இடத்தில் 1963 ஆம் ஆண்டு, தமிழ் நாட்டின் அன்றைய முதலமைச்சர் காமராசர் ஆட்சிக்காலத்தில், பாளையம் புதூர், குட்டூர், ஏலகிரி, சாமிசெட்டிப் பட்டி, கடுகாரன்பட்டி   ஆகிய கிராமங்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அன்றைய நீர்வளம் மற்றும் விவசாயத்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு சிறிய நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்திற்கு ஒபுளிராயன் மலை மற்றும் ஜெகநாதன் கோம்பை மலைகளிலிருந்து தண்ணீர் வருகிறது. இந்த நீர்த்தேக்கத்தை கொண்டு மழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை வைத்து இந்தப் பகுதியிலுள்ள 6 ஊராட்சிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான  விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசனவசதி பெற்று வந்தன. இந்த நீர்த்தேக்கத்தினால் திம்மலகுந்தி ஏரி, நாய்க்கன ஹள்ளி ஏரி, புது ஏரி, பக்கிரி ஏரி, சின்னபெரமன் ஏரி, ஏலகிரி பெரிய ஏரி ஆகிய 6 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. மேலும் எஞ்சிய தண்ணீர் பாளையம்புதூர் ஏரி, குட்டூர் ஏரி, தொம்பரகாம்பட்டி ஏரி, தாதநாயக்கன்பட்டி ஏரி, கடுகாரன்பட்டி ஏரி வழியாக நாகாவதி அணைக்கு நீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் அணைக்கட்டு உடைந்து அடித்துச் செல்லப் பட்டுவிட்டது. தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணைக்கட்டு பராமரிப்பின்மையால், அணை தனது முழு கொள்ளளவை எட்ட முடியாமல் தண்ணீர் வீணாகிறது. மேலும் இப்பகுதியில் சிலர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தும்,, தூர்த்தும் வருவதால், இந்தக் கால்வாய் மூலம் வரும் தண்ணீரினால் நிரம்பும் ஏரிகள் வறண்டுபோய் விட்டன. ஆங்காங்கே கருவேல மரங்கள் முளைத்து காடாகவும் ஆகி விட்டன.  பாசனவசதி பெரும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தப்பகுதி மக்களின் 15 ஆண்டு கோரிக்கையாக அரசிடம் வைப்பது: சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கூண்மாரிக்கொட்டாய் என்ற இடத்தில் உள்ள குன்று வழியாக புதிய கால்வாய் கட்டினால், அருகிலுள்ள ஏரிகள் மழைக்காலங்களில் எளிதாக நிரம்பி எஞ்சியுள்ள தண்ணீர் நாகாவதி அணைக்குச் சென்றுவிடும், இதனால் விவசாய நிலங்கள் மீண்டும் பாசனவசதி பெரும் என்றும் அரசு இதை உடனடியாக செயல்படுத்தித் தரவேண்டும் என்பதுதான்.
இந்த அணைக்கட்டை புனரமைக்க 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிதி ஒதுக்கப்பட்டு பொதுப்பணித் துறையால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக