திங்கள், 28 ஜனவரி, 2019

அதியமான் குணசீலன் (கி.பி. 666-700)


சங்க காலத்தில் பேரரசர்களாகத் திகழ்ந்த அதியமான்கள், பல்லவர்கள் காலத்தில் நாமக்கல் உள்ளிட்ட பகுதியைச் சிறிது காலம் தலை நகராகக் கொண்டு ஆட்சிசெய்திருக்கின்றனர். நாமக்கல் மலையில் உள்ள குடைவரைக் கோயில்களில் உள்ள இரண்டு கல்வெட்டுகளை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர் வரலாற் றாய்வாளர்கள்.  இந்த குடைவரைக் கோயில் “அதியநாத விஷ்ணுக்கிரகம்” என்றும், “அதியேந்திர விஷ்ணுகிரகம்” என்றும் குறிப்பிடப் படுகின்றது. இந்த குடைவரையை எடுப்பித்தவன் குணசீலன் என்னும் அரசன் என்பதையும் கல்வெட்டால் அறிய முடிகிறது. மற்றொரு கல்வெட்டு, அதியர் குலத்து சோமன் என்னும் ஒரு பெயரைத் தருகிறது. இங்குக் குறிப்பிடும் அதியர், சோமன் என்ற குணசீலன் ஆவான். இவன் எழுப்பிய குடைவரைக் கோயில்கள் பல்லவர் காலத்துக் குடைவரைக் கோயில் களுக்கு இணையாகத் திகழ்கின்றன. கரூர் அருகே தான்தோன்றி மலையில் உள்ள முற்றுப் பெறாத குடைவரைக் கோயில் இவனது திருப் பணியாக இருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுவர்.
சோமவம்சத்தை (சந்திர குலம்) சேர்ந்த அதிராசன் மகள் வயிற்றுப் பேரன் இவன் என்றும், அதியர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும், குறு (நாட்டு) அரசன் என்றும் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. இந்த அதியமான் தன் தாய்வழியில் பல்லவர்க்கு உறவினனாக இருக்கலாம்; இவனது தாய் பல்லவ இராசசிம்மனின் உடன் பிறந்தவளாக இருக்கலாம் என்றும், பல்லவர்களில் நந்திவர்மன் தொடங்கி ஆண்ட காடவர் குலமே (பீமவர்மன் கிளை) சந்திரகுலம் என்று குறிக்கப்படுவதால், காடவர் குலத்தோன்றல் ஒருவனின் உடன் பிறந்தவளாக அதியமான் குணசீலனின் தாய் இருந்திருத்தல் வேண்டும் என்றும் இரு கருத்துகள் உள்ளன.
இவ்வதியமானின் சிறப்புப் பெயர்களாக, மதன விலாசன், மானசாரன், நயபரன், நரதேவன், பிரகிருதிப்ரியன், உதாரசித்தன், விமலசரிதன், மனோமாயன், ஸ்ரீபரன், சிலிபிருதன் (அ) சிதிபுதன் என்னும் பெயர்கள் இக்குடைவரைக் கோயிலிலும், பாறையிலும் பொறிக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள குடவரைக் கோயில்களின் சிற்ப அமைதியும், கட்டட அமைப்பையும் ஆராய்ந்த ஆய்வாளர்கள் இவை பெரும்பான்மையாக மேலைச் சாளுக்கியர்களின் பாதாமி குகைக் கோயிலை ஒத்துள்ளன என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இவ்விரு கோயில்களையும் செய்வித்த மன்னன் அல்லது சிற்பி பாதாமி குடைவரையைக் கண்டுவந்தவனாக இருக்க வேண்டும், பாதாமியின் நான்காவது குகையின் தாக்கம் இவர்களிடத்தில் வெகுவாக ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை இக்குடைவரைக் கோயில்கள் உணர்த்துகிறது. பல்லவ-சாளுக்கிய கலைகளின் கலப்பு வடிவமாக இக்குடைவரைக் கோயில்கள் திகழ்கின்றன.
நாமக்கல்-திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள குணசீலம் என்னும் ஒர்ரும் அதியமான் குணசீலனின் பெயரால் அமைக்கப்பட்டது. குணசீல சதுர்வேதி மங்களம் என்னும் பெயரின் சுருங்கிய வடிவமே இது. அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட ஊர் இது. இந்த ஊர் வரை இவனது ஆட்சியின் எல்லை பரவியிருக்க வேண்டும். இவனது ஆட்சி ஓரளவுக்கு அமைதியான ஆட்சியாக, பிற பேரரசர்களின் தலையீடு இல்லாத சுயாட்சியாக இருந்திருக்க வேண்டும், இல்லாவிடில் இத்தகைய கலைக் கோயிலை எடுக்கும் வகையில் அரசானது கவனம் திரும்பியிருக்காது என்ற  சொ. சாந்தலிங்கம் அவர்களின் கூற்று சிந்தனைக்கு உரியது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக