புதன், 30 ஜனவரி, 2019

கரும்பு


கரும்பின் வரலாறு:
பப்புவா நியூ கினியா தீவை தாயகமாகக் கொண்ட கரும்பு விவசாயம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், தெற்கு சீனம் என்று பரவி குப்தர்கள் காலத்தில் இந்தியா வருகிறது.
கி.மு.8000 ஆண்டுகள் வரலாறு கொண்டது கரும்பு. இந்தோ-சீன மக்கள் இடம்பெயர்ந்த தென் பசிபிக் கடற்பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியா தீவில் காடுகளில் இயற்கையாக வளர்ந்துகிடந்த கரும்புப் பயிர்களைக் கண்டனர். உள்ளூர் மக்கள் கரும்புகளில் பல இனங்களை விவசாயம் செய்வதைக் கண்டனர். ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குப் பிறகு கரும்புப் பயிர் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வட இந்தியாவிற்குள் வருகிறது. வட இந்தியாவில் கரும்பு (Saccharum barberi) பயிரிடத் தொடங்கிய காலத்தில் அங்கிருந்து கி.மு. 800- இல் கரும்பை  சீன நாட்டிற்கு கொண்டுசென்று பயிரிடத் தொடங்கினர். இவ்வாறாக கரும்புப் பயிரிடும் முறை பரவாலாகத் தொடங்கியது. ஆரம்பகாலத்தில் கரும்பு கடித்து சுவைத்து உண்ண மட்டுமே இருந்த நிலையில், குப்த பேரரசின் காலத்தில் (கி.மு.400) கரும்பிலிருந்து சாறு எடுத்து அதனைக்கொண்டு சர்க்கரை தயாரிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்தது.
அதவர்வன வேதத்தில் (1500-800 கி.மு) கரும்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தை படைத்த சர்க்கா, சுஸ்ருதர் பல இடங்களில் கரும்பின் உபயோகம் குறித்து எழுதியுள்ளனர்.  சுஸ்ருத சம்ஹிதையில் 12 வகையான கரும்புகள் குறித்து எழுதப்பட்டுள்ளன. 
ஜைன மதத்துறவி முதலாம் தீர்த்தங்கர ரிஷபதேவர் மக்களுக்கு கரும்பிலிருந்து சாறு எடுக்கும் முறையைக் கற்றுத்தந்துள்ளார். ஜைனமத இலக்கியமான உபமித்பவ பிரபஞ்ச கதா என்ற நூலில் கரும்பிலிருந்து சாறு எடுப்பதற்கான இயந்திரம் (ஜைந்த்ரா) பற்றி கூறுகிறது.
மனுதர்ம சாஸ்த்திரத்தில் கரும்புப் பயிர் குறித்தும் கரும்புச் சர்க்கரைக் குறித்தும் குறிக்கப்பட்டுள்ளன.
சிந்து சமவெளி ஆராய்ச்சியாளர்கள், அன்றைய மக்கள், கரும்புப் பயிர் பற்றியும், கரும்பிலிருந்து சாறு எடுத்து அதனை சர்க்கரையாகச் செய்யும் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்று குறிப்பிடுகின்றனர். ஏறத்தாழ கி.மு 700 வாக்கில் கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்கும் தொழில்நுட்பம் வணிக ரீதியில் பரவியதாகச் சொல்லப்படுகிறது.
கரும்பை அரைத்து சாறெடுத்து அதனை சூரிய ஒளியில் காயவைத்து எடுக்கப்படும் சர்க்கரை மணல் போல இருக்கும். சமஸ்க்ருத மொழியில் சர்க்கரை என்பதற்கு 'மணல்என்பது பொருள். இந்தியாவிற்கு வந்த புத்த துறவிகள் இந்த தொழில்நுட்பத்தை சீன தேசத்திற்கு எடுத்துச் சென்றனர். பழங்கால சீன மொழியிலும் 'மணல் சர்க்கரை' என்றே கரும்புச் சர்க்கரைக்கு பொருள். 
தருமபுரியில் அதியமான் பரம்பரையைச் சேர்ந்த நெடுமான் அஞ்சி, கரும்பை தூர தேசத்திலிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டதாக ஔவையார் அதியமானை பாராட்டுகிறார்.
அரும் பெறல் அமிழ்தம் அன்ன 
கரும்பு இவன் தந்தோன் பெரும் பிறங்கடையே'  
-   புறநானூறு 329: 20-22
'அமரர்ப் பேணியும் ஆவுதி அருந்தியும் 
அரும்பெறல் மரபின் கரும்பு இவன் தந்தும் 
நீரை இருக்கை ஆழி சூட்டிய 
தொன்னிலை மரபின் முன்னார்'   
 -    புறநானூறு 99:1-4
கரும்பு பெரும்பாலும் நீர்வளம் உள்ள பகுதிகளில் (அன்றைய சோழ நாட்டில்) பயிரிடப்பட்டதையும், கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்கும்போது வரும் வாசனைக் குறித்தும் பல சங்கப் பாடல்கள் உள்ளன. 
(உதாரணம்) மருதை கூளவாணிகன் சீத்தலைச் சாத்தனாரின் ஒரு பாடல்: 
"ஆர் குறுகு உறங்கும் நீர் சூழ் வள வயல் 
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து
பலான யாமை பசு வெயில் கொள்ளும் 
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர்" 
- அகநாநூறு (பாடல் 306) 
வரிபூங் கரும்பின் கழனி   (2ஆம் பத்து 3:13) 
கரும்பு பயிர் செய்யப்பட்ட இடம் 'கரும்பின் கழனி என்று கூறப்பட்டது. 
சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் மலையும் மலைசார்ந்தப் பகுதியான தகடூரில் ஆடுமாடுகள் வளர்ப்பிலும், மேட்டு விவசாயம் செய்யும் முல்லை நில மக்களுக்காக தகடூரை ஆண்ட அதியன் நெடுமான் அஞ்சி, ஏரிகளை உருவாக்கிநிரந்தரமாக முழுமையான பாசன வசதிகொண்ட நிலமாக்கிகரும்பை விளைவித்தான் என்று பார்க்கும்பொழுதுமுல்லை நில விவசாயத்தை மருதநில விவசாயமாக மாற்றி, மக்களை முன்னேற்றவேண்டும் என்கிற அவனது உயரிய சிந்தனை, அதோடு கரும்புப் பயிரிடும் முறையை தமிழகம் முழுவதும் பரவிடக் காரணமான அவனது தொலைநோக்குப் பார்வை குறித்து .நாம் வியப்படையாமல் இருக்கமுடியாது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக