திங்கள், 28 ஜனவரி, 2019

அகில இந்திய வானொலி நிலையம், தருமபுரி பண்பலைவரிசை



தருமபுரி மாவட்டத்தில் அகில இந்திய வானொலி நிலையத்தின் பண்பலை வரிசை 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் துவங்கப்பட்டது இந்த .நிலையத்திலிருந்து,  உள்ளூர் நிகழ்ச்சிகளை தயாரித்துத் தொகுத்து வழங்கவும்,  சென்னையிலிருந்து வானவில் நிகழ்ச்சிகளை வழங்கவும் முடியும்.
தமிழ்நாடு அரசு தருமபுரி மாவட்டத்தில் இந்த நிலையம் தொடங்க 1997 ஆம் ஆண்டில் அதியமான் கோட்டைப் பகுதியில் 7 ஏக்கர் நிலம் ஒதுக்கியது, 1999 ஆம் ஆண்டுவாக்கில், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உயர் அழுத்த தொலைக்காட்சி மின் கோபுரங்கள், நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்கான அரங்குகள் முதலானவை கட்டிமுடிக்கப்பட்டது. இருந்தும் இங்கு வானொலி நிலையம் அமைப்பதில் சில நிர்வாக தடங்கல்கள் இருந்தன. 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாள் சோதனை ஒலிபரப்பு செய்துபார்க்கப்பட்டது. இருந்தும் முழுநேரமாக நிகழ்ச்சிகள் ஒலிபரப்ப போதுமான பணியாட்கள் மற்றும் இதர பிரச்னைகள் காரணமாக ஒலிபரப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
இதே காலகட்டத்தில் சுமார் 14 பண்பலை வரிசை வானொலிநிலையங்கள் ஊரகப் பகுதிகளில் துவங்கப்பட்டு ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. பின்னர் பிரச்னைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் தருமபுரியில் வானொலி நிலையம் செயல்பாட்டிற்கு வந்தது. நாள்தோறும் காலை 6.00 மணி முதல் நன்பகல் 12.00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அதேபோல் வாராந்திர நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றன. ஒரு மணிக்கு ஒருமுறை செய்திகள் வாசிக்கப்படுகின்றன. உள்ளூர் பிரமுகர்கள் சந்திப்பு, நேயர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடல் நிகழ்ச்சிகள், வேளாண் செய்திகள் மற்றும் பிற நிகழ்வுகள் யாவும் தமிழ் மொழியில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இந்த பண்பலை வரிசையை 60 கி.மீ. சுற்றளவுக்கு வானொலி மூலம் கேட்கக்கூடிய வகையில் தேவையான சாதனங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன.
அகில இந்திய வானொலி 237 ஒலிபரப்பு மையங்களைக்கொண்டுள்ளது. இதில் 149 நடுத்தர, 54 உயர் அலைக்கற்றை வரிசைகளையும், 177 பண்பலை வரிசை டிரான்ஸ் மீட்டர்களைக்கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவின் 91.85% நிலப்பரப்பிற்கு வானொலி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. சுமார் 99.18% மக்களுக்கு, அகில இந்திய வானொலி சேவைகள் ஆற்றி வருகிறது. மேலும் 24 மொழிகள் மற்றும் 146 பேச்சு வழக்குகள் மூலமாக மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கிறது. அத்துடன் தேசிய மொழிகளில் 17-உம், 10 பன்னாட்டு மொழிகள் என 27 மொழிகளில் ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் நடத்திவருகின்றன.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக