திங்கள், 28 ஜனவரி, 2019

அஞ்சி அத்தைமகள் நாகையார்


இவர் ஒரு பெண்பாற் புலவர். நாகை என்பது இவருடைய இயற்பெயர். தகடூரை ஆண்ட மன்னர்களில் அஞ்சி எனும் பெயருள்ளவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவருடைய அத்தை மகளாக இவர் இருக்கக்கூடும். ஆகையால் இவர் அஞ்சி அத்தைமகள் நாகையார் என்ற பெயரில் கூறப்பட்டுள்ளார் என்றும் அத்தை மகள் என்பதால் அஞ்சியின் மனைவி என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவருடைய பாடல் ஒன்று (அகம்: 352)  அகநானூற்றில், குறிஞ்சித் திணையில்  இடம் பெற்றுள்ளது. 
“கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரு பனுவல்
தொல்லிசை நிறீஇய வுரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணினுள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனாள் எமக்கே”

மணப்பெண் ஒருத்தி தன் தோழியிடம் தன்னுடைய மனநிறைந்த மகிழ்ச்சியைக் கூறியதாக இவர் கூறிருள்ளது படிப்பவருக்கு பெரும் மகிழ்ச்சி தருகின்றது. அஞ்சி அரசன் மேல் புலவர் பாடும் பாடலுக்கு இசையமைத்துப் பாடும் பாணனுடைய இசையில், இசையும் தாளமும் ஒத்திருப்பது போலவும், காதலன்-காதலியின் திருமண நாள் போலவும் ஆண்டே மணப்பெண் நிறை மனம் பெற்றிருந்தால் என்று இவர் பாடும் பாடல் மிகவும் இனிமையானது. மேலும் இந்த பாடலில் பின்புலமாக, பாறையின் மேல் இருந்து ஆடுகிற மயிலுக்குப் பின்னால் பெரிய பலாப்பழத்தை வைத்திருக்கிற கடுவன் குரங்கு ஊர்த் திருவிழாவில் விறலி ஒருத்தி நாட்டியம் ஆடும்போது அவளுக்குப் பின்னாலிருந்து முழவு கொட்டும் முழவன்போல காட்சியளித்ததை இவர் வருணித்துப்பாடியுள்ளார். இதனால் இவர் இசைக்கலையில் தேர்ச்சி பெற்றவர் என்பது தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக