திங்கள், 17 டிசம்பர், 2018

அதியமான் பெருவழிக்கல்

       சங்க காலத்திற்குப் பின்னர் அதியர்கள், பல்லவர்கள் ஆட்சிகாலத்தில் அதிகாரிகளாகப் பணியாற்றிவந்துள்ளனர். நாமக்கல் நகரில் உள்ள மலைக்கோட்டையையும் புகழ்பெற்ற குடைவறை கோயிலையும் கட்டி ஆட்சி செய்தவர்கள் இந்த அதியமான்களே. பாண்டியர்களது ஆட்சிகாலத்தில் நாமக்கல்லை ஆண்ட அதியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பிறகு இவர்கள் சோழர்களின் கீழ் அதிகாரிகளாக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களில் சிலர் தகடூரையும் (இன்றைய தருமபுரி) ஆண்டுள்ளதைக் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியலாம்.
       கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் தகடூர் நாட்டையும் கிழக்கில் போளூர் வரையிலும், வடக்கில் ஆந்திரமாநிலம் வட்டிகம் வரையிலும்  “விடுகாதழகிய பெருமாள் எனும் “இராஜராஜ அதியமான் ஆட்சி செய்துள்ளான். இக்காலகட்டத்தில் இவன் காலத்தில் உருவானதே அதியமான் கோட்டையிலிருந்து நாவற் தாவளம் என்ற ஊர் வரை சுமார் 30 காதத்திற்கு அமைக்கப்பட்ட சாலையே “அதியமான் பெருவழி அன்றைய காலத்துப் போக்குவரத்து சாலை ஆகும். (இந்த நாவற் தாவளம் என்ற ஊர் எது என்பது இன்றுவரை அறியப்படாமலே உள்ளது).
       இந்த அதியமான் பெருவழியில், வழித்தூரத்தை பாமரரும் அறிந்துகொள்ளும் வகையில் அந்த சாலை எந்த ஊருக்குச் செல்கிறது, இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக முதலில் ஊர் பெயர்களையும், தொடர்ந்து எண்ணாலும் எழுதி, பெரிய துளைகள் மற்றும் சிறிய துளைகள் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளும் வகையில் கல்லில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு காத தூரத்திலும் இருந்துள்ளன. இவைகளில் தருமபுரியை அடுத்த பாலக்கோடு வட்டத்தில் மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே மேற்கு பகுதியில் வயல்வெளிகளுக்கு நடுவே தமிழக தொல்லியல் துறையினரால்  27 காதம் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டன. மற்றொருகல் தருமபுரியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள குள்ளனூர் என்னும் ஊரில் சாலையின் வலப்புறம் உள்ள கிணற்று மேட்டில் (29 காதம்) கண்டுபிடிக்கப்பட்டது. .
        பெரிய துளைகள் ஒவ்வொன்றும் 10 காதத்தைக் குறிப்பதாகவும் (ஒரு காதம் என்பது நான்கரை மைல் தூரம்) சிறிய துளைகள் 1 காதத்தைக் குறிப்பதாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (இதேபோல ஆரகழூரிலிருந்து காஞ்சிபுரம் வரை மகததேசப் பெருவழி இருந்ததை ஆறகழூர் பெருவழிக்கல் குறிப்பிடுகிறது).

அதியமான் பெருவழிக் கல் 29 காதம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக