வியாழன், 6 டிசம்பர், 2018

பென்னாகரம் மலைகிராமங்கள் – ஒரு பார்வை

vattuvanahalli village panchayat

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா, பாலக்கோடு ஒன்றியதிற்குட்பட்ட வட்டுவன ஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் அடங்கியியுள்ளது, இந்த ஊராட்சியின் மொத்த நிலப்பரப்பளவு 3304.52 ஹெக்டேர். ஊராட்சியில் அலக்காடு, அர்ஜுணன்கொட்டாய், அட்டப்பள்ளம், பி.கோடுப்பட்டி, தாசம்பட்டி, எழுமல்மந்தை, ஏரிமலை, காந்திநகர், ஜல்மாரன்கொட்டாய்,  கோடுப்பட்டி, கோட்டூர்மலை, குழிப்பட்டி, மருக்காம்பட்டி, மொரப்பூர், நாகனம்பட்டி, பழயானூர், பவளத்தூர், பவளந்தூர் சின்னசாமிகொட்டாய், பவளந்தூர் நாராயணன்கொட்டாய், ரெட்டியார் கொட்டாய்,, தொன்னமரத்துக்குழி, முருங்கமரத்தரசு, சக்கிலிநத்தம், தும்மக்கல், உப்பாலபுரம் ஆகிய 25 குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில்  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த குடியிருப்புகள் 1869. மொத்த மக்கள் தொகை 7537. இந்த மொத்த மக்கள் தொகையில் அட்டவணை இனத்தவர் 6.61%மும் அட்டவணை பழங்குடியினர் 3.46% உள்ளனர். 
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 3 மலை கிராமங்களான கோட்டூர் மலை, ஏரிமலை மற்றும் அலகாடுமலை உள்ளன. இம்மலை கிராமங்கள்,  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1330 மீட்டர்  உயரம் கொண்டது.  இங்கு சுமார் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் பெரும்பான்மையாக வெள்ளாளர், இருளர் எனும் பழங்குடியினர் மற்றும் தலித் இனத்தவர்கள்.
ஏரிமலையில் வெள்ளாளர் மற்றும் இருளர் இனத்தவர்கள்மொத்தம் 91 குடும்பங்கள் உள்ளன. இவர்களின் மொத்த மக்கள் தொகை 375 பேர்.
அலக்காட்டில் வெள்ளாளர் இனத்தவர்கள் மட்டுமே  சுமார் 38 குடும்பங்களில் 167 மக்கள் இருக்கின்றனர். இந்த மலையில் வேறு இனத்தவர்கள் இல்லை.
கோட்டூர்மலையில் தலித் மற்றும் வெள்ளாளர் இனங்களைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 121 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களது மொத்த மக்கள் தொகை 1036.
இந்த மலைகளில் உள்ளவர்களில் வெள்ளாளர் இனத்தவர்கள் மட்டும் சிறுகுறு விவசாயிகளாக உள்ளனர். ஏனையோர் விவசாயக் கூலிகளாக உள்ளனர். ஆண்டிற்கு 6 மாதங்கள் மட்டுமே இவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ராகி, சோளம், சாமை, நிலக்கடலை முதலான பயிர்கள் இங்குப் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு காட்டுப்பன்றிகள், யானை முதலான விலங்கினங்கள் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகின்றன என்பது வேதனை. இதையும் மீறி விளைகின்றப் பொருட்களை கழுதைகள் மீதேற்றி மலை அடிவாரத்திற்குக் கொண்டுவந்து பென்னாகரம், பாப்பரப்பட்டி போன்ற பகுதிகளில் விற்கின்றனர்.
இங்குள்ள இருளப் பழங்குடியின பெண்களும் முதியவர்களும் காடுகளின் ஊடே சென்று, வாரக்கணக்கில் தங்கியிருந்து அங்கேயே சமைத்து உண்டு, வனப்பொருட்களான தேன், சுண்டைக்காய், புன்கங்கொட்டை, கூக்கட்டான்காய், புளி, பழங்கள், கிழங்கு வகைகள், காய்ந்த விறகுகள் முதலான பொருட்களைச் சேகரித்து கீழே வந்து அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிச் செல்லும் அவலநிலையில் உள்ளனர். இந்த மலைகளில் உள்ளவர்கள் பெரும்பாலோருக்கு பட்டிமாடுகள் உள்ளன. அவைகளை மேய்ச்சலுக்கு காட்டிற்குள் கொண்டு விட்டுவிடுகின்றனர்.  ஏறத்தாழ 6 மாதங்களுக்கு ஒருமுறை அவைகள் திரும்பிவிடுகின்றன. இருளர் இனப்பெண்கள் கூலிக்கு ஆடுகள் மேய்க்கின்றனர். கூலியாக ஆடுகள் ஈனும் குட்டிகளில் பாதியை பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு பங்கு ஆடுகள் மேய்த்தல் என்று இவர்கள் கூறுகின்றனர். ஆடுகளை வனப்பகுதியில் மேயவிட்டு, பாதுகாப்புடன் தினமும் திருப்பி கொண்டுவருதல் இவர்களின் அன்றாடப்பணிகளுள் ஒன்று.
பெல்ரம்பட்டியை அடுத்த கான்ஸால்பெயில் என்ற அடிவாரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் கோட்டூர் கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள் மலைக்கு சாலை வசதி கேட்டு கடந்த 50 ஆண்டுகளாகப் போராடி விட்டு 5 கி.மீ. தூரத்திற்கு மட்டும் இங்குள்ள மக்களே மண்சாலை அமைத்துள்ளனர். மீதமுள்ள 4 கி.மீ. தூரம் மலைப் பகுதியாக இருப்பதால் வனத்துறை அனுமதித்தால் மட்டுமே சாலை அமைக்கமுடியும் என்பதால் அப்படியே இருக்கிறது. இந்த மண்சாலை மற்றும் ஒழுங்கான பாதைவசதி அற்ற கரடுமுரடான மலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்து சென்றால் கோட்டூர் மலையை அடையலாம்.  இங்கிருந்து இதர 2 மலைகளையும் இணைக்கும் எந்த சாலை வசதிகளும் கிடையாது. நடைவழித் தடங்கள் மட்டுமே உண்டு.
வனத்தை ஒட்டிய இந்த மலைக்கிராம மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். மழை, பனிக்காலங்களிலும் கடுமையான காற்று வீசும் காலங்களிலும் இவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவர்களுக்கு வனவிலங்குகளின் பாதிப்பும் நிறையவே உள்ளது.  
இந்த 3 மலைகிராமங்களுக்கும் மின்வசதியும் குடிநீர் வசதியும் கிடைத்துள்ளது. சுகாதாரமையத்திற்கு மருத்துவர் வாரம் ஒருமுறை வருகிறார். போதுமான மருத்துவ வசதியின்றி இருப்பதால், இந்த 3 மலைகிராம மக்களும், நோயுற்றவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் பென்னாகரம் மருத்துவமனைக்கு தொட்டில் கட்டித் தூக்கிக்கொண்டு வந்து சிகிச்சை பார்க்கின்றனர்.
ஏரிமலையில் உள்ள ஒரு  துவக்கப்பள்ளி பின் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மாணவர்கள் மேற்கொண்டு பென்னாகரம், பாப்பரப்பட்டி, திருமல்வாடி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கும் மானவர்களுக்கும் ஏற்படும் சிரமங்களினால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த மலைக்கிராமத்தினர் அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று நடுநிலப்பள்ளி, போதுமான அடிப்படை வசதிகளின்றி உயர்நிலைப்பள்ளியாக மாற்றப்படுள்ளது.   
ஏரிமலையில் 1 ரேசன் கடையும் உள்ளது. பொருட்கள் கீழிருந்து கழுதைகள் மூலம் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
அரசின் நடவடிக்கைகளால், இம்மலைமக்களில் சிலர் குழிப்பட்டி, எலுமல்மந்தை போன்ற அடிவார கிராமங்களில் அரசு கட்டிதந்த குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்,
ஒவ்வொரு தேர்தலுக்கும் இங்குள்ள வாக்காளர்களுக்காக வாக்கு இயந்திரங்கள் மற்றும் தளாவாட சாமான்கள் கழுதைகள் மூலம் கொண்டுசெல்லப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது.
இவர்களுக்குத் தேவையான தரமான சாலைவசதி, குடியிருக்க தரமான நீடித்து நிலைக்கத்தக்க வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் இயற்கையோடு இயைந்து வாழும் இந்த மக்களின் வாழ்வு வளம் பெரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக