சனி, 22 டிசம்பர், 2018

சிங்காரதோப்பு முனியப்பன் கோயில், நடுப்பட்டி, மொரப்பூர்


தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது சிங்காரதோப்பு முனியப்பன்  கோயில். நடுப்பட்டி கிராமம் மொரப்பூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஊர் எல்லையில் சுமார் 230 சதுர அடி பரப்பில் 7 அடி உயர மேடையில் இரண்டு முனியப்பன்கள் (அண்ணன் தம்பி என்று சொல்லப்படுகிறது) சிலைகள் ஒருக்கால் மடக்கியும் ஒருக்கால் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில், கண்கள் விரிந்து,  காண்போர் அஞ்சத்தக்க வகையில் உள்ளன. பலவகையான மரங்களால் சூழப்பட்ட இந்த இடம் அமைதியான சூழ்நிலையில் அழகாக இருப்பதால் சிங்காரத்தோப்பு என்று பெயர் வந்திருக்கலாம். (எப்படி தென் தமிழகத்தில் உள்ள ஐயனார் ஊர்க்காவல் தெய்வமாக நாட்டுப்புறங்களில் கருதப்படுகிறாரோ அதே அளவில் முனியப்பன் என்ற தெய்வம் கருதப்படுகிறது.  தருமபுரி மாவட்டத்தில் நீர் நிலைகளைப் பாதுகாக்கும் தெய்வமாக பல கிராமங்களில் முனியப்பன் கோயில்கள் உள்ளது. அநேக இடங்களில் முனியப்பன் கோயில்கள் நீர்நிலைகளை ஒட்டிய இடங்களிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.)

இந்த சிங்காரதோப்பு முனியப்பன்  கோயில் உருவான விதம் பற்றிய செவிவழிக் கதை: இந்த கோயிலின் அருகாமையில், ஆங்கிலேயர்கள் காலத்தில் புகைவண்டிப் போக்குவரத்திற்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கும்போது, இரவில் கட்டுமானப் பொருட்கள் அடிக்கடி திருட்டு போய்விடுமாம். அப்போது ஒரு பணியாளரின் கனவில் முனியப்பன் தோன்றி, இங்குள்ள தோப்பில்தான் நான் இருக்கிறேன். எனக்கு கோயில் எடுத்து வழிபட்டால் உங்கள் குறைகளைத் தீர்த்துவைப்பேன் என்று சொன்னாராம். இதைக் கேட்ட சக பணியாளர்கள் சேர்ந்து இங்கு முனியப்பன் சிலை அமைத்து வழிபட ஆரம்பித்தப் பிறகு களவு போவது நின்று விட்டதாகவும் பின்னர் ஆண்டுதோறும் அந்த பணியாளர்கள் ஒன்று சேர்ந்து இங்கு விழா எடுத்து வந்தனர் என்று சொல்லப்படுகிறது.
தீவினைகள் போக்கும் தெய்வமாக எண்ணி, திருமணம், குழந்தைப்பேறு, தொழில்வளம் சிறக்கவும் இந்த முனியப்பனை வேண்டிக்கொண்டால், அப்படியே நிறைவேறும் என்பது சுற்றுப்பகுதி மக்களின் நம்பிக்கை. வேண்டியது நிறைவேறியவுடன், மக்கள் இங்குவந்து பொங்கலிட்டு, முனியப்பனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழி பலியிட்டு பூசைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.  
செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. மாதாந்திர அமாவாசை நாட்கள் மற்றும் ஆடி 18ஆம் நாள், ஆயுதபூஜை, கார்த்திகை தீபம் முதலான நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இப்போது தினந்தோறுமே தருமபுரி, சேலம், வேலூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து முனியப்பனை தரிசித்து பூசைகள் செய்து வழிபடுகின்றனர். வார இறுதி நாட்களில் சுமார் பத்தாயிரம் பேர் வரை இந்தக் கோயிலுக்கு வருகின்றனர்.
இந்த கோயில் தமிழ அரசின் இந்து அறநிலையத்துறைக் கட்டுபாட்டில் வருகிறது. நாள்தோறும் அரசின் அன்னதானத் திட்டத்தின் கீழ் சுமார் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக