செவ்வாய், 4 டிசம்பர், 2018

விடுகாதழகிய பெருமாள்


இவன் அதியர் வம்சத்தை சேர்ந்தவன். கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் தகடூரை ஆட்சி செய்த இவன் இராசராச அதியமானின் மகன். சோழப் பேரரசின் விரிவான நிலப்பரப்பில், மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தின் 1௦ ஆம் ஆண்டு முதல் மூன்றாம் இராஜராஜ சோழனின் 8 ஆம் ஆட்சியாண்டு வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் அவர்களது ஆட்சிக்குட்பட்டு தகடூரை ஆண்டவன். இவனது ஆட்சி எல்லை கர்நாடகத்தின் கோலார், (குவலாளபுரம் என்பது அன்றைய பெயர்) உட்பட்ட கங்கநாடு, (முதலாம் ராஜராஜனால் வெற்றிகொண்டு கைப்பற்றியப் பகுதியுடன்) ஆந்திர மாநிலம் சித்தூர், தமிழ்நாட்டின் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்செங்கோடு என பெரும் எல்லையாக விரிந்து பரவியிருந்தது. இவன் பாலி, (பாலாறு), பெண்ணை, பொன்னி (காவிரி) என 3 ஆறுகளுக்கு உட்பட்டப் பகுதியை ஆண்டவன் என்று குறிக்கப்படுகிறான். 
தென்பெண்ணையாற்றின் கரையில் சிறுகோட்டையில் தன் பெயரில் ஒரு கோவில் எழுப்பியுள்ளான். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் சிந்தல்பாடி என்ற ஊரில், சிவநீஸ்வரமுடையார் கோவிலுக்கு தானம் வழங்கியுள்ளான். இவனது ஆட்சிக் காலத்தில், இவன் சைவம், சமணம் என இரண்டையும் போற்றியதை, இவன் சைவக் கோவில்களுக்குச் செய்த திருப்பணிகள், சமணர்களுக்காக குடைவறைக் கோவில்களைப் புதுப்பித்து தந்தமைக் குறித்து கல்வெட்டுகள் கூறுகின்றன. வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் அமைந்துள்ள ஆதிகேஸ்வரம் கோவில் இவன் எடுப்பித்ததே. இங்குள்ள சிவனுடைய பெயர் “விடுகாதழகிய ஈசுவரமுடையார்” என்றே அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் “விடுகாதழகிய பெரும்பள்ளி” என்ற ஒரு சமணப்பள்ளி இருந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் திருமலையில் இவனது முன்னோர் அதியமான் எழுனியால் உருவாக்கப்பட்ட சமணப்பள்ளியை புதுப்பித்துள்ளான். இந்த சமணப்பள்ளியின் கொடைநிலத்தில் உள்ள கடப்பேரி, பாசன வசதி பெறும்பொருட்டுக் கால்வாய் அமைத்துள்ளான். தருமபுரியில், இன்று கம்பைநல்லூர் என்றழைக்கப்படும் நாகையம்பள்ளியில் தேசிநாதேஸ்வரர் கோவில் இவனால் தோற்றுவிக்கப்பட்டதே. 
இவனே அதியர் வம்சத்து கடைசி மன்னனாவான்.


ஆதாரம்:
தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும் -ச.கிருஷ்ணமூர்த்தி. வெளியீடு,: தருமபுரி மாவட்ட வரலாற்றுப்பேரவை, பாப்பாரப்பட்டி. 1989.
விடுகாதழகிய பெருமாள் - புலவர்.பெ. இராசு,  கல்வெட்டியல் புலம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். தருமபுரி மாவட்ட சமூக பொருளாதார வரலாறு- 1800 முதல் - கருத்தரங்கக் கட்டுரைகள்.  வெளியீடு: ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி. 1989.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக