புதன், 26 டிசம்பர், 2018

கால பைரவர் கோயில், அதியமான்கோட்டை

கால பைரவர் கோயில் - மூலவர் 

கால பைரவர் கோயில் முகப்புத் தோற்றம் 

கால பைரவர் கோயில் 

கோயில் முன்புறம் 

கோயிலில் சிற்பங்கள் 




தருமபுரி நகர்பகுதியிலிருந்து சேலம் செல்லும் சாலயில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தட்சிணகாசி (தென்காசி) காலபைரவர் கோயில்.
சிவாலயங்களில் ஈசானிய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரம் கால பைரவர் இங்கு தனிக் கோயிலில் மூலவராக இருக்கிறார். இவரது திருமேனியில் 27 நட்சத்திரங்களும் 12 இராசிகளும் உள்ளடக்கி வைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. எனவே, தோஷம் விலகவேண்டி அவரவர் ராசிக்கேற்ப, (மேஷ ராசிக்காரர்கள் இவரது தலையை பார்த்தும், ரிஷப ராசிக்காரர்கள் இவரது கழுத்தைப் பார்த்தும், மிதுன ராசிக்காரர்கள் தோல் புஜத்தைப் பார்த்தும், கடகராசிக்காரர்கள் மார்பை பார்த்தும், சிம்ம ராசிக்காரர்கள் வயிற்றுப் பகுதியை பார்த்தும், கன்னி ராசிக்காரர்கள் குறியைப் பார்த்தும், துலா ராசிக்காரர்கள் தொடையைப் பார்த்தும், விருச்சிக ராசிக்காரர்கள் முட்டிபகுதியை பார்த்தும் மகர ராசிக்காரர்கள் முட்டியின்  கீழ்ப்பகுதியைப் பார்த்தும், கும்ப ராசிக்காரர்கள் கணுக்காலைப் பார்த்தும், மீன ராசிக்காரர்கள் பாதத்தைப் பார்த்தும்) கும்பிட்டால் தோஷம் விலகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் காசியில் கால பைரவருக்கென்று ஒரு தனிக்கோயில் உள்ளதாகவும் அதனை அடுத்து தென் இந்தியாவில் கால பைரவருக்கென்று அமைந்துள்ள தனிக்கோயில் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. மொத்தமுள்ள 64 கால பைரவர்களுள் முதன்மையானவர் உன்மந்திர பைரவர். இவர்தான் இந்தக் கோயிலில் வீற்றிருக்கிறார்.
வரலாறு:
தகடூரை ஆண்ட அதியமான் வழிவந்த ஒருவர் எதிரி நாட்டரசர்களின் தொல்லைகளால் மிகவும் மன அமைதியின்றி இருந்ததாகவும், ஜோதிடர்களிடமும், அமைச்சரவையினரிடமும் இது குறித்துக் கேட்க, அவர்களது ஆலோசனைப்படி காலபைரவருக்குத் தனிக்கோயில் அமைத்து வழிபட அனைத்தும் சரியாகும் என்று அவர்கள் கூறியதன் அடிப்படையில் இந்த இடத்தில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு காலபைரவர் கோயில் கட்டப்பட்டது என்றும், இங்குள்ள காலபைரவர் சிலை, இவரது பிரதிநிதிகள் காசிக்குச் சென்று எடுத்து வந்ததாகவும், இந்தக் கோயிலில் காலபைரவரின் கருவறையின் அவருடைய சிலை மட்டும் தனியாக இருக்கக்கூடாது என்பதால், மேற்கூரையில் நவகிரகங்களின் வடிவங்களை சக்கரமாகவும் 12 இராசிகளையும் வடித்து வைத்துள்ளதாகவும், இங்குள்ள காலபைரவர் சிலையை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகிவிடும் என்றும் நம்பப்படுகிறது.
காவல் தெய்வமான காலபைரவரின் கரங்களில் திரிசூலத்துடன் வாளும் கொண்டிருப்பதால் இவர் தம்மையும், தன் நாட்டையும் எதிரிநாட்டவர்களிடம் இருந்து காப்பார் என்றும் அரசன் நம்பி நாள்தோறும் வழிபட்டு வந்ததாகவும், அந்த அரசன் போருக்குச் செல்லுமுன் தன்னுடைய வாளை இங்கு வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தபிறகே போருக்கு செல்வார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த காரணத்தினாலேயே இன்றளவும் மக்கள் தாங்கள் நினைத்த காரியங்கள் வெற்றியடையவும், எதிரிகளின் தொல்லைகள் அகலவும் இங்குள்ள காலபைரவரை திரிசூலத்துடன், வாளையும் வைத்து வணங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பூசைகள்:
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ராகுகாலத்தில் பூசைகளும் மாதாந்திர தேய்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதியில் விநாயகர், லட்சுமிக்கு பூசைகளும், அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. மேலும் அன்றைய தினம் தீவினைகள் தீர ஹோம பூசைகளும் நடத்தப்படுகின்றன. இங்கு சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பூசை செய்தால், எதிரிகள் தொல்லைகள் விலகும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் இங்கு தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திறந்து வந்து காலபைரவரை தரிசித்து வழிபட்டுச் செல்கின்றனர்.  இங்கு தருமபுரி மக்கள் மட்டுமின்றி, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் முதலான மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கால பைரவரை தரிசித்து வழிபாடு செலுத்தி இவரது அருள் பெற்றுச் செல்கின்றனர்.
இந்தக் கோயில், தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக