புதன், 12 டிசம்பர், 2018

நைனாப்பள்ளம்


சின்ன கல்ராயன்  மலை

நாய்குத்தி கிராம நுழைவாயில் 
நைனாப்பள்ளம் செல்வதற்கான வனத்தின் நடுவே உள்ள பாதை 


மடுவுக்கு நீர்வரத்து 

மடுவுக்கு நீர்வரத்து  



நைனாப்பள்ளம் 
 
மடுவின் ஒரு பகுதி
      
வனத்துறையின் தடுப்பணை 

நைனாப்பள்ளதிலிருந்து தடுப்பணை நோக்கி..
             
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில், அரூரிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு எல்லையோரம் கடைக்கோடி கிராமமாக, சேலம் மாவட்டத்திலுள்ள சின்ன கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டி மலையோரமாக நகர்புறத்தாக்கதிலிருந்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிலிருந்தும் தப்பி நிற்கும் “நாய்க்குத்தி எனும் மலைவாழ் மக்கள் வசிக்கும் ஓர் அழகான கிராமம். இக்கிராமத்தில் சுமார் 100 மலையாளி (ST) குடும்பங்கள் சுமார் 5 தலைமுறைகளாக வசித்து வருகின்றன. பெரும்பாலும் சிறு விவசாயிகளான இப்பழங்குடி மக்கள் நெல், கரும்பு, மஞ்சள் என விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். தார்சாலை வசதி இருந்தும் பேருந்து வசதியற்ற கிராமங்களில் இதுவும் ஒன்று. இதற்கு அருகாமையில் வடக்கு திசையில் சுமார் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வேலனூர் என்ற கிராமம். திருவண்ணாமலையிலிருந்து சேலம் செல்லும் பேருந்துகள் யாவும் கோட்டப்பட்டி சிட்டிலிங் வழியாக வேலனூரைக் கடந்து தும்பல், வாழப்பாடி வழியாக  சேலம் செல்கின்றன. ஆனால் நாய்க்குத்தி கிராமத்திற்கு நேரடியாக பேருந்து வசதி இல்லை. வனவிலங்குகளின் குறிப்பாக காட்டெருமைகளிடமிருந்து தப்பிய மீதமுள்ள விளைப்பொருட்களை விற்க பெரும்பாலும் வாழப்பாடி (நாய்க்குத்தி கிராமத்திலிருந்து 40 கி.மீ.) ற்றும் ஈரோடு  சந்தைகளையே நம்பியுள்ளனர். கரும்பு மட்டும் அரூர் சுப்ரமணியசிவா சர்க்கரை ஆலை மற்றும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்குக் (திருவண்ணாமலை மாவட்டம்) கொண்டுச் செல்கின்றனர். இம்மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் விறகு, கால்நடை தீவனம், தழையுரம், மூங்கில் போன்றவைகளுக்குக் காட்டையே பெரிதும் நம்பியுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் பெருக இயற்கை அளித்த கொடையாக அமைந்துள்ளதே இக்கிராமத்தை ஒட்டியுள்ள “நைனாப்பள்ளம் மடுவு எனும் தடாகம் ஆகும். கல்வராயன் மலையில் உருவாகி  கோடைக்காலம் நீங்கலாக பிற மாதங்களில் தண்ணீர் வெள்ளி நீராகப் பெருக்கெடுத்து சலசலத்து  காட்டு மூலிகைகளின் சாரத்துடன் இப்பள்ளத்தின் வழியாக ஓடி கோரையாறு என்ற பெயரில் சிற்றாறாக இக்கிராமத்தின் மேற்கு திசையில் செல்கிறது. வனப்பகுதியில் (மூங்கில் காடு) அமைந்துள்ள இந்த சிற்றோடையின் இடையே இயற்கைச் சூழலில் அடர்ந்த காட்டின் குளிர் காற்றும் தூய்மையான தண்ணீரும் உள்ள நைனாப்பள்ளம் தடாகம் இயற்கைச் சூழல் விரும்புவோர்க்கு மிகவும் பிடித்தமான இடமாக இருக்கும். இந்த தடாகம், நாய்க்குத்தி கிராமத்தின் தெற்கு எல்லையில் வேடியப்பன் கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது. வேடியப்பன் கோவிலை ஒட்டி வனத்துறை ஒரு தடுப்பு அணை கட்டியுள்ளது. அணையிலிருந்து வழியும் தண்ணீர் மேற்கு நோக்கி பாய்வதால் இக்கிராம மக்களுக்கு விவசாயம் செய்ய மேற்படி தடுப்பு அணைக்கு மேலே சுமார் 200 மீ. தள்ளி மற்றொரு தடுப்பு அணை பெரியதாகக் கட்டி கிழக்கு நோக்கி வாய்க்கால் அமைத்தால் விவசாயம் பெருகும் என்பது இக்கிராம மக்களின் எதிர்பார்ப்பு.  மேலும் வேடியப்பன் கோவிலில் இருந்து சின்னக்கல்வராயன் மலையிலுள்ள கருமந்துறை கிராமம் சுமார் 6 கி.மீ. தான். இந்த 6 கி.மீ.இல் பெரும்பகுதி வனப்பகுதியில் சேலம் மாவட்ட நிர்வாகம் மண் சாலை வசதி செய்துள்ளது. மீதி உள்ள தருமபுரி மாவட்ட வனப்பகுதியிலும் மாவட்ட நிர்வாகம் சாலை வசதி செய்துகொடுத்தால் இம்மக்கள் தங்களின் விளை பொருட்களை கருமந்துறை சந்தைக்கு எடுத்து சென்று விற்கமுடியும் என்றும் கூறுகின்றனர்.

இந்த சிற்றோடையை சூழியல் சுற்றுலாத் தலமாக்கினால் இம்மக்களின் வாழ்வாதாரம் பெருவாய்ப்பும்  உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம், மாநில சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயல்பட்டால் இம் மலைவாழ் மக்களின் எதிர்காலம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக