சனி, 8 டிசம்பர், 2018

பொதியன்பள்ளம் தடுப்பணை


தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூரை அடுத்த புதுரெட்டியூர், முத்தானூர் கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது பொதியன்பள்ளம் தடுப்பணை. இந்தத் தடுப்பணைக்கு வத்தல்மலை நீர்பிடிப்புப் பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்தத் தடுப்பணை நிரம்பினால், தண்ணீரை, அணையின் பக்கவாட்டு மதகின் வழியாக உள்ள கால்வாயில் திறந்துவிட்டால், நல்லகுட்டலஹள்ளி, ஓசஹள்ளி, லிங்கநாய்க்கனஹள்ளி, சிந்தல்பாடி, வகுத்துப்பட்டி, பசுவாபுரம், சந்தப்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளில் உள்ள 18 ஏரிகள் நிரம்பும். அதன் மூலம் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும். அதேபோல மதகின் வழியாக திறந்து விட்டால் புதூர், வெங்கடதார ஹள்ளி, குருபர ஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, தாளநத்தம் முதலான பகுதிகள் பாசன வசதி பெறும்.
கடந்த மாதம் எங்களது கள ஆய்வில் விவசாயிகள் கூறியதாவது:  ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இந்த தடுப்பணை தண்ணீர் இன்றி நிரம்பாமல் இருந்த காரணத்தினால் அணையின் நீர்வரத்துப் பகுதிகள் தூர்ந்தும், போக்கு கால்வாய்கள் சிதிலமடைந்தும் ஆக்கிரமிப்புகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதா அவர்களால் இந்தத் தடுப்பணையை விரிவாக்கம் செய்ய அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான பணிகளை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு செய்தது. கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் அணைக்கு நீர் வரத்துக் கால்வாய் தூர் வாரப்பட்டது என்றும் ஆனால் அந்தப் பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை என்று இங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர். 2015 ஆம் ஆண்டு நவம்பரில் மாவட்டத்தில் பெய்த பெருமழையினால் இந்த அணை ஓரளவு நிரம்பியது. ஆனாலும் அரசு நிர்வாகம் இந்த அணையின் தண்ணீரை பாசனதிற்குத் திறந்து விடாமல் கல்லாற்றிற்குத் திருப்பிவிட முடிவு செய்ததை அடுத்து பேச்சு வார்த்தை நடத்தி பகல் நேரங்களில் பக்கவாட்டு மதகின் வழியாகவும் இரவு நேரங்களில் நேரடி மதகின் வழியாகவும் தண்ணீர் திறந்துவிட முடிவெடுக்கப்பட்டதாகவும் ஆனால் அரசு நிர்வாகம் அதன்படி செய்யாததால் விவசாயம் பாதித்தது ,எனவே அரசு உடனடியாக இந்த அணையை சீர்செய்து வருங்காலங்களில் முறை வைத்து நீர்பாசனத்திற்குத் திறந்துவிட ஆவண செய்யவேண்டும்" என்பதே. 

பொதியன்பள்ளம் அணை 

தூர்வாரப்படாத கல்லாறு நோக்கி செல்லும் கால்வாய்  

நீர்வரத்துக் கால்வாய் புதர்மண்டி இருக்கிறது 

 பக்கவாட்டுக் கற் தடுப்புகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது 

அணைக்கட்டு விரிவாக்கப்பணிகளுக்கான கல்வெட்டு 

அணையின் பக்கவாட்டு கால்வாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக