வெள்ளி, 7 டிசம்பர், 2018

அருள்மிகு சென்னியம்மன் கோவில், நீப்பத்துறை

சென்னியம்மன், நீப்பத்துறை
         

தருமபுரி மாவட்டதிற்கும் திருவண்ணாமலை மாவட்டதிற்கும் எல்லையாக உள்ளது தென்பென்னையாறு. இந்த ஆற்றின் கரையோரத்தில் தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் உள்ள டி.அம்மாபேட்டை. கிராமத்திற்கும் இதனை ஒட்டியே மறுகரையில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் ஒன்றியத்திலுள்ள நீப்பத்துறை கிராமத்திற்கும் இடையில் ஓடும் தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ளது, இந்த கோவிலை அடைய அரூரிலிருந்து வடமேற்காக சுமார் 33 கி.மீ. பயணிக்கவேண்டும். தீர்த்தமலையிலிருந்து 12 கி,மீ, தூரத்தில் இருக்கிறது.
நாட்டுப்புற மக்களால், குறிப்பாக அடித்தட்டு மக்களால், மக்களோடு மக்களாக வாழ்ந்து இறந்தவர்களை உயர்நிலையில் வைத்து வழிபடும் முறைக்கு நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு என்கிறோம். 
நாட்டுப்புற தெய்வங்களுள் தாய்தெய்வங்களில் பகைவர்களால் கொல்லப்பட்டு இறந்தவர்கள், பாலியல் வன்முறையை எதிர்க்கும் முயற்சியில் இறந்தவர்கள், பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொண்டவர்கள், கணவன் இறந்துபட்டவுடன் அவனோடு உடன்கட்டை ஏறியவர்கள் என அகாலமரணத்தை அடைந்த பெண்களை வீர வழிபாட்டுக்கு உகந்தவர்களாக்கி, அவர்களை தம் ஊர் குலம் காக்கும் கடவுளாக வழிபடுவது நாட்டுப்புற மக்களின் பண்பு. ஐம்பூதங்களையும் தெய்வமாக நினைத்து வழிபடும் மரபு அநேகமாக உலகின் அனைத்து மக்களிடமும் உள்ளது. அனைத்து உயிரினங்களும் உயிர்வாழத் தேவையான தண்ணீரை, பெற்றத் தாயாகப் போற்றி அதனை பெண்ணாகாகவும் தாயாகவும் வழிபாடு செய்வது, நீர் நீலைகளைப் போற்றி வணங்குவதும் நாம் தமிழர்களின் பண்பாடு. இதன் அடிப்படையிலேயே ஆறுகள் முதலான நீர்நிலைகளுக்குப் பெண்கள் பெயர்சூட்டி வணங்குவதும்.
தென்பென்னையாற்றின் கரையில் ஒரு பாறையை, சிவபார்வதி, விஷ்ணு, மகாலட்சுமி போன்ற சைவ வைணவ பெருந்தெய்வங்களுக்கு உள்ள கோவில்கள் போலன்றி, உருவ வழிபாடுகள் ஏதுமின்றி, கன்னித்தெய்வமான சென்னியம்மன் மறைந்துவிட்டதாகக் கருதும் பாறையையே அவளது உருவமாகவும், அவளது இருப்பிடமாகவும் கருதி வழிபாடு செய்வதும் நமது நாட்டுப்புற பண்பாடுகளில் ஒன்று.
முகமதியர்கள் படையெடுப்பின்போது, படைத்தலைவனால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி, அவனிடமிருந்து தப்பிக்க, சென்னியம்மன் இந்தப் பாறையில் மறைந்துவிட்டாள் என்ற செவிவழி கதை, பல்வேறு பழங்குடியின மக்களிடையே பல்வேறு விதங்களில் இன்றும் கூறப்படுகிறது.
தற்போது வெள்ளியிலான திருவுருவச் சிலையை அந்த பாறையில் வைத்து இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இது, சமூக வளர்ச்சியினால், நாட்டுப்புறப்பண்புகளை இழந்து சிறு தெய்வங்கள், பெருந்தெய்வங்களாக மாறிவருவதைக் காட்டுகிறது.
அதேபோல நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டின் தனித்தன்மைகளுள் ஒன்று கடவுளர்களுக்கு உயிரினங்களை பலிகொடுப்பது. சமீபகாலம் வரைக்கூட இந்த கோவிலில் ஆடு, சேவல் முதலான விலங்கினங்களை பலியிட்டு, அம்மனுக்குப் படைப்பது வழக்கமாக இருந்தது.  ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று (ஆடி மாதம் 18ஆம் நாள்) அண்டை மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் மக்கள் பெருந்திரளாகக் கூடி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்ள விலங்கினங்களை பலியிட்டு அம்மனுக்கு படையலிட்டு வணங்குவது இருந்தது. கடவுள்களுக்கு விலங்கினங்கள் பலியிட அரசு தடைவிதித்து விட்டதாலும், இறைச்சி கழிவுகளினால் தண்ணீர் மாசடைவதைத் தடுக்கும் பொருட்டு தற்போது விலங்கினங்கள் பலியிடுவது குறைந்து விட்டது. நாட்டுப்புறப் பண்பாட்டில் இதுவும் ஒரு மாற்றம்.
இந்த நீப்பத்துறையில் ஒரு சித்தர் வந்து தங்கி சித்தி அடைந்ததாகவும், அவர் சமாதி ஆன இடத்திலேயே ஸ்ரீ பிரசன்ன வெங்கட்டரமண பெருமாள் சன்னதி அமைந்துள்ளது என்பது இங்குள்ளவர்கள் கூறும் செய்தியாக உள்ளது. 
இந்த சித்தர் இக்கிராமத்தில் உள்ள ஒரு கற்பாறையில் தனது ஆற்றலைக் கொண்டு மந்திர சக்கரங்கள் அமைத்து அதனுடன் அரை அடி ஆழத்தில் ஒரு குழி அமைத்து வைத்துச் சென்றதாகவும் அந்தக் குழியில் நல்லெண்ணையை மூன்று முறை ஊற்றி வழிபட்டு அந்த எண்ணெயை இறங்குமுகமாக வழித்தெடுத்து விஷப்பாம்பு தீண்டியவர்கள் உள்ளுக்குச் சாப்பிட குணமடைவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது

மந்திர சக்கரம் எழுதப்பட்ட பாறை 
மந்திர சக்கரம் (வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது)

சென்னம்மன் கோவிலுக்குச் செல்ல ஆற்றில் சிமெண்ட் பாதை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக