வெள்ளி, 14 டிசம்பர், 2018

திருமதி எஸ்.ஹேமலதா தேவி



திருமதி எஸ். ஹேமலதா தேவி, அன்றைய மதராஸ் மாகாண சட்டசபை தேர்தலில் 1957 ஆம் ஆண்டு அன்றைய ஒருங்கிணைந்த மாவட்டமான சேலம் மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக நின்று வெற்றிபெற்றவர்.
இவர் 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியில் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி. வரை சென்னையில் படித்த இவருக்குத் திருமணமாகி 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளனர். சேலம் நகரிலுள்ள அரிசிப்பாளையத்தைச் சேர்ந்தவர். ஒருங்கிணைந்த சேலம் ஜில்லா போர்டு உறுப்பினராக 1949 முதல் 1053 வரை இருந்தார். ஏறத்தாழ 18 ஆண்டுகள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மேலும் அன்றைய சேலம் மாவட்டத்தின் இந்தியப் பெண்கள் சங்கத்தின் செயலாளராக 7 ஆண்டுகள் பொறுப்பு வகித்த பின்னர் அச்சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர். அனைத்திந்திய பெண்களுக்கான மாநாட்டின் தமிழகக் கிளையின் நிலைக்குழு உறுப்பினராக 2 ஆண்டுகள் இருந்தார். மிகச் சிறந்த சமூக சேவகராகவும் சேலத்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுப்பட்டவர்.
திருமதி எஸ். ஹேமலதா தேவி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், சட்டசபையில் விவசாயம், உள்ளாட்சி நிர்வாகம், கூட்டுறவுத்துறை, சாதிய ஒழிப்பு, மருத்துவம், பொது சுகாதாரம், விவசாயிகளுக்கு வரிவிலக்கு, தன் தொகுதி மக்களுக்கு மின்வசதி  முதலான விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார். மேலும் அன்றைய நாளில், மதராஸ் மாகாணத்தில் கன்னியாகுமரியை இணைத்ததற்கும் அதற்காகப் போராடிய திரு. நேசமணி அவர்களையும் பாராட்டிப் பேசியுள்ளார்.
பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, பாப்பரப்பட்டி பகுதிகளுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டும், விவசாயப் பணிகளில் டீசல் உபயோகப்படுத்துவோருக்கு வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும் முதலான கோரிக்கைகளையும் வைத்தார். ஓராண்டுக்குள்  அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மின் வசதிகள் அன்றைய காங்கிரஸ் அரசால் செய்து தரப்பட்டது. அதற்கு அடுத்த கூட்டத்தொடரில் மின் வசதிகள் செய்தமைக்கு நன்றி தெரிவித்து, தொடர்ந்து பென்னாகரம் பகுதியிலுள்ள மலைகிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரவேண்டும்என்றும் கேட்டுக்கொண்டார்.
திருமதி எஸ். ஹேமலதா தேவி, பல்வேறு சட்டசபை கூட்டத்தொடர்களில் நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்று பல்வேறு விஷயங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். அவைகளில் சில: மலை கிராமங்களில் மருத்துவமனைகள் ஏற்படுத்தி அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும், மலைகிராமங்களில் பணியாற்ற பெண் மருத்துவர்களை நியமிக்கப்படவேண்டும். 23-05-1958 இல் பஞ்சாயத்து மசோதா சட்டசபையில் கொண்டுவரப்பட்டபோது, உள்ளாட்சி நிர்வாகங்களில் தலைவர்களுக்கு நிறைய அதிகாரம் அளிக்கப்படவேண்டும், மிகக் குறைவாகவே பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப் படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது மசோதாவில் குறிப்பிடப்படவில்லை என்பதாக விமர்சித்துள்ளார். பஞ்சாயத்துத் தலைவர்களாக விரும்பும் செல்வாக்குபெற்ற உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்களைக் கடத்திக்கொண்டுபோய் தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க வைக்கின்றனர் என்று எதிர்க்கட்சிகள், இந்த மாதிரியாக பஞ்சாயத்துத் தலைவர்கள் தேர்தல்கள் நடைபெறுவதை தடுக்கப்படவேண்டும் என்று கூறினர். ஹேமலதா தேவி, இது போன்ற தலைவர்கள் தேர்தல்கள் இந்தியா ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானப் போக்கு என்றும் இனி இது போன்றவைகள் நடைபெறாமல் இருக்க சட்டத்தின் மூலம் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். (கூவத்தூரில் நடந்தவைகளை நினைத்துப் பார்த்தால் காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவே இல்லை என்றே தோன்றுகிறது!!!).
அடுத்து 1962-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இவர் பென்னாகரம் தொகுதியிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கினார். இருப்பினும் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் எம்.வி.கரிவரதன் என்பாரிடம் தோல்வி அடைந்தார்.
இவரது மறைவுக்காலம் குறித்து எதும் தெரியவில்லை.

ஆதாரம்:
மதராஸ் மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் யார் எவர் (1957), மதராஸ் சட்டமன்றத் துறை வெளியீடு.(27-06-1957)
Political participation of women during Congress rule - Part III - S. JayaSundar, Ph.D thesis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக