புதன், 5 டிசம்பர், 2018

தருமபுரியின் வேடந்தாங்கல் - ராமக்காள் ஏரி

வத்தல் மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் நீர் அப்பனஹள்ளி கோம்பை கிராமத்திற்கு அருகே சனத்குமார நதியாக உருவெடுக்கிறது. இங்கிருந்து இந்த நதி, லளிகம், மிட்டாரெட்டிஹள்ளி, ஏமகுட்டியூர், இலக்கியம்பட்டி, அன்னசாகரம் ஆகிய கிராமங்கள் வழியாக கால்வாய் செல்கிறது. இடையில் உள்ள லளிகம் ஏரி,பெரிய ஏரி, அதியமான்கோட்டை ஏரி, மாதேமங்கலம் சோழவராயன் ஏரி, ஒட்டப்பட்டி ஏரி, நூலஹள்ளி ஏரி, ஏமகுட்டியூர் ஏரி, அன்னசாகரம் ஏரி, இலக்கியம்பட்டி ஏரி, மொடக்கேரி ஆகிய ஏரிகளைக் கடந்து கால்வாய் தருமபுரி நகரத்திலுள்ள திருப்பத்தூர் சாலை, சந்தைபேட்டை, அவ்வையார் அரசு பெண்கள்  மேனிலைப்பள்ளி, டி.இ.எம்.எஸ்.காலனி, உழவர் சந்தை ஆகிய பகுதிகளைக் கடந்து ராமக்காள் ஏரியை அடைகிறது. இடையில் தருமபுரி நகரிலுள்ள கான் சாஹிப் குளம், நரசையர் குளம், குண் செட்டி குளம், பலப்பன் குட்டை (தற்போது இந்தக் குட்டையை மூடி நகராட்சி பூங்காவாக மாற்றிவிட்டது) மற்றும் எண்ணற்ற கிணறுகளின் நீர்மட்டம் உயரக் காரணமாய் இருந்தது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ராமக்காள் ஏரி 82 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு 0.85 மில்லியன் கனமீட்டராகும். இந்த தண்ணீரைக் கொண்டு பழைய தருமபுரி, மதிகோன் பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 111 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்த பாசன விளை நிலங்களில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.  ஏறத்தாழ ஆண்டு முழுவதும் இந்த ஏரியில் தண்ணீர் இருக்கும் இந்த ஏரியில் வலசை போகும் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கருப்பு மூக்கு நாரை, சின்னக் கொக்கு, செங்கால் நாரை, நத்தைகூடை நாரை, சிறிய பச்சி கொக்கு முதலான வெளிநாடுப்பறவைகள் வந்து முகாமிட்டுப் பருவகாலம் முடிந்து திரும்பிசெல்லும்.  7௦களில்  கூட இந்த சனத்குமார நதி ஓடிக் கொண்டிருந்தது. இந்த  நிரம்பியா பின் எஞ்சிய நீர் பழைய தருமபுரி, குண்டலப்பட்டி, செம்மாண்டகுப்பம் வழியாக ஓடி இறுதியாக கம்பைநல்லூர் அருகே  கலக்கிறது.
தற்போது இந்த ஏரிக்கு வரும் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கால்வாய், நகரில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டங்கள் கட்டப்பட்டு விட்டதால் நகரின் பெரும்பாலான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவு நீரால் இந்த ஏரி அதிக அளவில் மாசடைந்து வருகிறது. மேலும் ஏரிக்கரையோரங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், மெல்லமெல்ல ஏரியின் பரப்பளவும் குறைந்துகொண்டே வருவதை பார்க்கமுடிகிறது. மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரினால் ஏரி நிரம்பிவிட்டதாக அடிக்கடி செய்திதாள்களில் செய்தி வரும். ஆனால் ஏரியில் அபரிதமாக வளர்ந்திருக்கும் கருவேல மரங்கள், செடிகொடிகள் போன்றவைகளால் ஏரி முழு கொள்ளளவை எட்டியது இல்லை என்றே சொல்லமுடியும்.
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீரைச் சுத்தப்படுத்தி ஏரியில் விட சுமார் 40  ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வாராமல் அப்படியே கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.   வரும்   கால்வாய் அடைபட்டு நீர்செல்ல வழியின்றி இருக்கிறது. 
2௦12 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இந்த ஏரியைத் தூய்மைப்படுத்தி, சுற்றுலாத்தலமாக மாற்ற, அப்போதைய  ஆட்சித் தலைவர் லில்லி அவர்களின் முயற்சியால், பொது மக்களின் பங்களிப்போடு செயல்திட்டம் உருவாக்கி, ஏரியைத் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி நடைபாதை, குழந்தைகள் பூங்கா, படகு துறை, பறவைகள் சரணாலயம் போன்றவைகளை அமைக்க நடவடிக்கைள் எடுத்ததுடன்  ஏரியைச் சுற்றிலும் புல்வெளிகளும் அமைக்கப்பட்டன.
2 கி.மீ. அளவுக்கு  சுற்றி நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்காக நடைதளம், இளைப்பாற  கல்லாலான இருக்கைகள் அமைக்கப்பட்டு  மக்களின் பயன்பாட்டிற்கும் வந்தது. மாவட்ட நிர்வாகம்,  நகராட்சி நிர்வாகத்தின் தொடர்  பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாமல் போனதால் தற்போது, புல்வெளிகள் காய்ந்து விட்டன. நடைபாதை கற்தளங்கள்  சிதிலமடைந்து காணப்படுகின்றன.  ஏரியிலும் கரையோரங்களிலும் மீண்டும் செடிகொடிகள், மரங்கள் புதர்போல் காட்சியளிக்கின்றன. இங்கு மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கழிப்பறை கட்டிமுடிக்கப்படாமல் இருக்கிறது.  இந்த ஏரிக்கரை தற்போது "குடிமகன்"களின் கூடாரமாக மாறிவிட்டது. இதனால் ஏரியை சுற்றிப்பார்க்க யாரும் வரமுடியாத சூழல் நிலவுகிறது. 
அரசு நிர்வாகம் மனது வைத்து ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பாராமல் அகற்றி இந்த ஏரியை மீண்டும் தூய்மை படுத்தினால், தருமபுரி நகர் மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக இருப்பது மட்டுமின்றி, வரும் வலசைப் பறவைகளின் (migratory birds) எண்ணிக்கையும் கூடும். நீர் ஆதாரம்  பெருகும். ஏரியை  ஒட்டிய  பகுதியில் வேளாண்மையும் செழிக்கும்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக