வெள்ளி, 14 டிசம்பர், 2018

கம்பைநல்லூர்

தருமபுரி நகரிலிருந்து சுமார் 20 கி,மீ. தொலைவில் உள்ளது கம்பைநல்லூர் உள்ளது. இது தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளுள் ஒன்று.
கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் 3ஆம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் "பெண்ணைக்கரை மருவுஞ் சிறுக்கோட்டை குளன் நாகை" என்றும் அதே நூற்றாண்டைச் சேர்ந்த ஒய்சாள மன்னன் வீர விசுவநாதன் என்பான் ஆட்சி காலத்திய கல்வெட்டில் "நாகையனப்பள்ளியான காலிங்கராய சதுப்பேதிமங்கலம்" என்று குறிக்கப்பட்டுள்ளது. 15 ஆம் நூற்றாண்டின் விஜயநகர மன்னன் வீரதேவ மகாராயனின் காலத்தில் "அலைமலை தற்றிய கங்க நாட்டுத் தகடை நாட்டு, மூக்கனூர் பற்று கம்பைய நல்லூர்" என்று அழைக்கப்பட்டு வந்தது.  எனவே, இந்த ஊர், நாகை, நாகையனப்பள்ளி, சதுப்பேதி மங்கலம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்து, 15 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றைய கம்பைநல்லூராக நிலைத்துவிட்டது எனலாம்.
.இந்த கம்பைநல்லூரில்வடகிழக்கே உள்ள தேசிநாதீஸ்வரர் என்ற சிவன் கோவில், கி.பி. 13ஆம் நூற்றாண்டில் 3ஆம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் அதியமான் மரபைச் சேர்ந்த, குறுநில மன்னனான விடுக்காதழகிய பெருமாள் தகடூரை ஆட்சி செய்து வருகையில் கம்பைநல்லூரில் ஒரு கோட்டையைக் கட்டி அந்த கோட்டைக்குள் இந்த சிவன் கோவிலை எழுப்பியுள்ளான். இக்கோவில் திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட கற்றளி ஆகும். இங்குள்ள சௌந்தராம்பாள் என்ற பெயரில் அம்மனுக்குத் தனி கோயிலின்றி மகாமண்டபதிலேயே அமைக்கப்பட்டுள்ளது.  கோவிலின் விமானம் 3 நிலைகளுடன் உள்ளது. இந்த கோவில் பிற்காலத்தில் விஜயநகர மன்னர்களால் செம்மை படுத்தப்பட்டுள்ளது. தகடூரை ஆண்ட பல மன்னர்கள் இந்தக் கோயிலுக்கு கொடைகள்  அளித்துள்ளதற்கு  பல்வேறு கல்வெட்டுகள் சாட்சியங்களாக உள்ளன. இன்று இந்த சிறு கோட்டை சிதிலமடைந்து கோட்டைமேடு என்றும், கோட்டைக் கோயில் என்றும் இங்குள்ள மக்களால் அழைக்கப்படுவதால் ஒரு காலத்தில் இங்கு ஒரு கோட்டை இருந்ததற்கு சாட்சியமாகக் கொள்ளலாம்.
இங்குள்ள ஒரு சிற்றாறுக்குப் பெயர் கம்பைநல்லூர் ஆறு.  இந்த ஊருக்கு மேற்கே, பாலக்கோடு அருகில் உள்ள பிக்கிலி மலையில் உருவாகி, பாலக்கோடு, தருமபுரி வழியாக ஓடி கம்பைநல்லூர் ஆறாகிறது. இந்த ஆற்றுடன், வத்தல் மலையில் உருவாகி ஓடிவரும் சனத்குமார நதியும் இணைந்து, ஊருக்கு வடகிழக்கே உள்ள ஈச்சம்பாடி என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இன்று இந்த ஆறு ஓடியதற்கான சாட்சியாமாக பாலம்  இருக்கிறது. ஆறுகள் காணாமல் போய்விட்டன.
இந்த ஊருக்கு அருகே உள்ள வெதரம்பட்டி கிராமத்தில், புதிய கற்காலத்தில் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்த புதிர்நிலைக் கற்கள் சமீபத்தில் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய புதிர்நிலை கற்கள் இவை என்பது ஆய்வாளர்களின் கருத்து.   (பார்க்க: கம்பைநல்லூர் புதிர்நிலைக் கற்கள்).

ஆதாரம்: தருமபுரி மாவட்டத் திருத்தலங்கள் வரலாறு-  முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரை 
தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக