செவ்வாய், 4 டிசம்பர், 2018

தருமபுரி மாவட்டத்தில் குளங்கள் சில...

அதப்பாடி குளம் 
மன்னர் அதியமான் காலத்தில்  அவருடைய குதிரைப்படை வீரர்கள் தங்குமிடமாக விளங்கிய இந்த இடத்தில் மன்னரால் வெட்டப்பட்ட குளம் என்று கருதப்படுகிறது.  சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தக் குளம் இன்று இரண்டு ஏக்கர் என்ற அளவில் சுருங்கி அந்த கிராமத்திலுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் மாசடைந்துக் காணப்படுகிறது. இந்த குளத்திற்கு நீர் வரும் பாதைகளையே காணவில்லை. பெய்யும் மழைநீரினால்  மட்டுமே இந்தக் குளத்தில் நீர் சேர வாய்ப்பு உள்ளது. இக்குளத்தை தூர்வாரி சீர் செய்தால் சுற்றியுள்ள சுமார் 1௦௦ விவசாயக் கிணறுகள் பயன்பெறும். பொதுப்பணித்துறை, உள்ளாட்சி நிர்வாகத்தினால் கண்டுகொள்ளப் படாத குளங்களில் இதுவும் ஒன்று. 
                         குன்செட்டிக் குளம் 
தருமபுரி நகரில் சாலை விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாடிலுள்ள இந்த குளம் கடந்த 3௦ ஆண்டுகளில் குளத்தின் நாலாபுறமும் மட்டுமின்றி குளத்தின் படிகட்டுகளும்கூட ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகி விட்டன.  குளத்தின் உட்புறம் செடிகொடிகளும் மரங்களும் வளர்ந்து காணப்படுகின்றன. இக்குளத்தின் வழித்தடங்கள் மறைந்து சிமெண்ட் சாலைகளாகி விட்டன. குளம், குப்பைகள் மற்றும் கழிவுநீர் சேமிப்பு கிடங்காகி விட்டன. குளத்தை ஆக்ரிமித்து கட்டிய வீடுகளுக்கு அவர்களுக்கு எப்படி மின்சார இணைப்புகள், குளத்தின் வழித்தடத்தை மறைத்து சிமெண்ட் சாலைகள் கிடைத்தன?. இதனை கண்டுகொள்ளாத அரசுத்துறைகளை என்ன சொல்வது?... இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள கோவில்களுக்கு சுவாமி அபிஷேகம் செய்ய இங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்வதும்,  இந்தக் குளத்தில் மக்கள் நீராடிவிட்டுக் கோவில்களுக்கு செல்வதும் ஒருகாலத்தில் வழக்கமாக இருந்தன. அதெல்லாம் பழங்கதை என்று விட்டுவிடலாமா?
விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த குளத்தை சீர்செய்யாவிட்டால் அரசின் பதிவேடுகளில் மட்டுமே இந்த குளத்தின் பெயர் இருக்கும். குளம் மறைந்துவிடும்.

மனியம்பாடி கோவில் குளம் 
தருமபுரி கடத்தூர் சாலையில் உள்ளது மனியம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீ வேங்கடரமண சுவாமி திருக்கோவிலுக்கு அருகே உள்ளது இந்த குளம். ஜெகதேவராயர் ஆட்சி காலத்தில் அவரது மனைவி பையம்மா ராணி என்பரால் வெட்டப்பட்டது இந்த குளம். இதனை வறட்சிக்கு இலக்காகும் பகுதித் திட்டத்தின் கீழ் மனியம்பாடி நீர்வடிபகுதி திட்டத்தில் 2௦௦2-2௦௦3 ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்டு சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டுள்ளது.  
                                கருத்தான் குளம் 
தருமபுரி-மொரப்பூர் சாலையில் ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சியில் கருத்தாங்குளம் என்ற இந்தகுளத்தின் பெயராலேயே அமைந்துள்ள ஒரு சிற்றூர். இங்கு, சிவன், முருகன் கோவில்கள் உட்பட 5 கோவில்கள் சிறிய அளவில் உள்ளன. அருகிலுள்ள சிறு குன்றுகளிலிருந்து வரும் மழைநீர் இந்த குளத்தில் சேமிக்கப்படுகின்றன. இங்கு கோவிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்கள், இந்த குளத்தில் நீராடி கடவுள்களை வழிபடுவது உண்டு. வருடம் முழுதும் தண்ணீர் இருக்கும் இந்தக் குளத்தின் நீர் வழித்தடம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவருவதால் குளம் தூர்ந்துபோய் மிகக் குறைவான நீரே இந்த குளத்தில் நிற்கிறது. அதுவும் விரைவில் வறண்டு விடுகிறது.  மிகச்சமீபத்தில் இந்த குளம் பசுமைத்தாயகம் அமைப்பினால் தூர்வாரப்பட்டு பக்தர்கள் உடை மாற்றிக்கொள்ள அறைகள் கட்டப்பட்டுள்ளன.
நரசையர் குளம் 
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இங்கு துணை ஆட்சியராக இருந்தவரிடம் பணியாற்றியவர் நரசையர். இவர் மக்களிடம் ஏராளமாக லஞ்சம் பெற்றவர் என்றும் தனது பாவத்தைப் போக்க இந்தக் குளத்தை வெட்டியதாகவும் வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுகிறது. இந்தக் குளத்திற்கு நீர்வரத்துக் கால்வாயாக இருந்தது சனத்குமார நதியின் கால்வாயே. இந்தக் கால்வாய் தண்ணீர், நரசையர் குளத்திற்கு வரும் முன்பாக, அருகில் உள்ள  பலப்பன் குட்டை என்ற குளத்தை (இந்த பலப்பன்குட்டை தருமபுரி நகர குப்பைகளால் மூடப்பட்டு தருமபுரி நகராட்சி பூங்காவாக மாறிவிட்டது) நிரப்பி பின்   நரசையர் குளத்திற்கு வரும். 
இன்று இந்தக் குளம் நகரின் மையப்பகுதியான 17வது வார்டில், கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ளது. குளத்தைச் சுற்றி சுமார் ஐநூறு வீடுகள் உருவாகிவிட்டன. இங்கு குடியிருக்கும் மக்கள் பெரும்பாலோர் விளிம்புநிலை மக்கள். குப்பைகளும் கழிவுநீரும் சேர்ந்து இந்தக் குளத்தை மாசுபடுத்தியதால் நகராட்சி, குளத்தை மூடிவிடும் முடிவுக்கு வந்தது. நகர் மக்களின் ஆட்சேபனைகளை அடுத்து 2௦16 ஆம் ஆண்டு குளம் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. ஆயினும் குளத்தின் அளவு சுருங்கிவிட்டது. குளத்தை முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் விட்டதால் தொடர்ந்து குப்பைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுகள் இக்குளத்தில் கொட்டப்பட்டு இன்றும் மாசடைந்தும் நீரின்றியும் காணப்படுகிறது. குளத்தின் கரைகள் உடைந்தும் காணப்படுகின்றன. இதற்கு நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை என்று காரணம் சொல்லப்படுகிறது. 
நூறாண்டுகளைக் கடந்த இந்தக் குளம் மீண்டும் தூய்மை செய்வதுடன் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்டிப்புடன் பராமரிப்பு செய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நீர் ஆதாரம் பெருகும். 
கான் சாஹிப் குளம் 
தகடூரை ஆண்ட சோழமன்னனால் வெட்டப்பட்ட இந்த குளம், பிற்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, சர்.தாமஸ் மன்றோ என்ற ஆங்கிலேய ஆட்சியரால் புதுப்பிக்கப்பட்டது. இந்த குளத்தை ஒட்டியே சனத்குமார நதி ஓடியுள்ளது. மிகச் சமீபத்தில் இந்தக் குளம் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. அத்துடன் குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து குளம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அத்துமீறி கம்பிவேலிகளை உடைத்து உள்ளே செண்று குளத்தை மாசுபடுத்துவதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர். குப்பைகளையும், குளத்தில் வளரும் செடிகொடிகளை அகற்ற நகராட்சியில் போதுமான ஆட்கள் இன்றி இருப்பதால் குளம் மீண்டும் மாசடையும் சூழ்நிலையில் உள்ளது. தருமபுரி நகரில் டேக்கிஸ் பேட்டையில் (தர்மபுரி-திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலையில் வேல் பால் டிப்போ அருகில்) உள்ள இந்த குளம் இங்குள்ள மசூதியின் பராமரிப்பில் உள்ளது.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் குளம்

தருமபுரி நகரில் குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ளது இந்த ராஜாங்கிணறு என்று அழைக்கப்படும் திருக்குளம். மிகவும் பழைமையானது இந்த குளம். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவருடைய இளமைக்காலத்தில், இங்குள்ள நண்பர்கள் மூலம் இந்தக் குளத்தில் தண்ணீரில் மிதக்கும் வித்தையையும், பலமணி நேரம் ஆடாமல் அசையாமல் படுத்திருக்கும் வித்தையையும் கற்றுக்கொண்டதாக தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார். நகரின் குப்பைகள் கொட்டப்பட்டு நீர் மாசுபட்டதுடன், வறட்சியினால் குளம் வற்றிபோயிருந்த நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் நகரின் வணிக பெருமக்களின் நன்கொடையோடு தற்போது (2018-ன் பிற்பகுதி) சுற்றுச்சுவர் எழுப்பட்டு குளம் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தாமஸ் மன்றோ குளம், தொப்பூர் 
தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை (எண்-7) யில்தொப்பூர் கணவாயில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. இந்தக் குளம் தாமஸ் மன்றோவால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த  குளமும் இக்குளத்தை ஒட்டியுள்ள இயற்கைச்சூழலும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு இளைப்பாறும் இடமாகவும் இருந்து வருகிறது.  கால்நடைகளுக்கும், காட்டு விலங்கினங்களுக்கும் தாகம் தீர்த்துக் கொண்டிருந்த இந்த குளமும் நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் சுருங்கிவிட்டது. ஜருகு வனப்பகுதியில் இருந்து வரும் நீரால் குளம் நிரம்பியபின் எஞ்சிய நீர் சாலையைக் கடந்து ஓடையாக ஓடி தொப்பையாற்றில் கலக்கும். இன்று இந்த சூழல் மாறி ஓடை நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மழைக்காலங்களில் மட்டுமே இந்த ஓடையில் நீர் ஓடுவதைக் காணமுடியும். வனத்துறை இந்த நீரைப் பயன்படுத்தி நாற்றங்கால் பண்ணை அமைத்துப் பராமரித்து வருகிறது. 
கால மாற்றம், மனிதனின் பேராசை இயற்கையை மட்டுமல்ல. வரலாற்றுப் பொக்கிசங்களையும்    அழித்து கொண்டிருக்கின்றன. ..
மேலும் பென்னாகரத்தில் தர்மராஜர் கோவில் குளம், கிருஷ்ணாபுரம் குளம், அரூரில் வருணீஸ்வரர் குளம், கடத்தூரில் விநாயகர் திருக்கோவில் குளம், நரிப்பள்ளியில் தாமரைக்குளம் என நிறைய குளங்கள் தருமபுரியில்  உள்ளன. இவைகளில் பெரும்பாலும் மாசடைந்தும், ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி பயனற்றுப் போய்கொண்டிருக்கின்றன.  இவைகளை போர்க்கால அடிப்படையில் பாதுகாக்கப்படாமல்  விட்டால் "நீர்நிலைகளைப் பாதுகாப்போம்", தண்ணீரை சேமிப்போம்" என்பதெல்லாம் வெற்று வார்த்தைகளாக மட்டுமே இருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக