சனி, 22 டிசம்பர், 2018

தருமபுரியில் பாரிவேட்டை

முயல் வேட்டை என்பது தென் தமிழகப் பகுதிகளில் பாரிவேட்டை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பண்டிகைக்கால வீர விளையாட்டு ஆகும். நாட்டுப்புற தமிழகத்தில் பண்டைய காலங்களில் கிராமங்கள்தோறும், சமுதாயங்கள் தோறும் கடைபிடிக்கப்பட்ட சில பழக்க வழக்கங்கள் பல பகுதிகளில் இன்றளவும் தொடர்கிறது. இதில் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, சித்திரை மாத பௌர்ணமி, சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் முயல் வேட்டை திருவிழா தமிழ்நாட்டின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகும். இது போன்ற திருவிழாக்களில் குறு வனவிலங்கினங்களான முயல் மட்டுமின்றி வங்கநரி, மான், காட்டுப்பன்றி போன்றவைகளை வேட்டையாடி கொண்டுவந்து அதன் கறியை எடுத்து ஊர்மக்கள் அனைவரும் பகிர்ந்துண்ணும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
பண்டைய காலத்தில் சமுதாயமாக இனக்குழுக்கள் இருந்தன. இனக்குழுக்கள் தமிழ் நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என திணை வாரியாக பாகுபடுத்தப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இனக்குழு சமூகத்தின் முக்கியத் தேவை உணவுப்பொருட்களே, இவர்கள் வனங்களில் வேட்டையாடுவதன் வழியாக தங்களுக்கான உணவை உற்பத்தி செய்துகொண்டனர். இந்த இனக்குழு சமூகத்தை மானிடவியலாளர்கள் வேட்டைச்சமூகம் என்கின்றனர்.  மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சித் திணைப்பகுதியில் வேட்டைச் சமூகத்தின் கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன. குறிஞ்சித்திணைப் பகுதிகளில் இன்றளவும் காணக்கிடைக்கின்ற வேட்டைச் சமூகத்தின் ஒரு பண்பாட்டுக் கூறுதான் முயல் வேட்டை அல்லது பாரிவேட்டை. (உதாரணம்: பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பச்சமலை, பழனிமலையை ஒட்டிய கிராமங்களிலும், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர் வட்டங்களில் உள்ள 25 கிராமங்களில் வங்கநரி  (Vulpes bengalensis என்ற விலங்கியல் பெயர் கொண்ட குள்ளநரி IUCN அமைப்பின் அழிந்துவரும் விலங்கினங்களின் சிவப்பு ஆவணப் பட்டியலிலுள்ள ஒரு விலங்காகும்) வேட்டை என இந்தத் திருவிழாக்கள் நடைபெறுவதை சொல்லலாம்). முல்லைத்திணைப் பகுதிகளில் மக்கள் சங்க காலத்திற்கும் முன்பே புன்செய் வேளாண்மையிலும் கால்நடை மேய்ச்சலிலும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் வேட்டையில் ஈடுபட்டது தாங்கள் பயிரிட பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் தங்களது உணவுத் தேவையை நிறைவாக்கி கொள்ளவே என்பதும் சங்கப் பாடல்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது. நெய்தல் திணையிலும் மக்கள், மீன் வேட்டையாடுவது தங்களின் உணவுக்காகவே. (புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக்காலங்களில் ஏரி, குளம், கண்மாய்களில் நீர் வற்றிய நிலையில் அப்பகுதிகளில் குறிப்பிட்டநாளில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது). இதுவும் வேட்டைச் சமூகத்தின் பண்பாட்டு எச்சமாகக் கொள்ளலாம். மருதத்திணை மக்களிடையே இதன் கூறுகள் சிறிய அளவிலேயே காணப்படுகின்றன.
வேட்டையாடிய விலங்கினங்களின் இறைச்சியைப் பாதுகாத்து வைக்க இயலாத நிலையில் இனக்குழுவினர் அனைவரும் பகிர்ந்துண்ணும் பழக்கமே இன்றைய காலத்திலும் திருவிழாவின்போது வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை கடவுளுக்குப் படைத்துவிட்டு இருப்பவர் இல்லாதவர் என பாகுபாடின்றி அனைவரும் பகிர்ந்துண்பது தொடர்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் அரூர் ஒன்றியத்தில் அச்சல்வாடி ஊராட்சிக்குட்பட்ட அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, ஓடசல்பட்டி ஆகிய கிராமத்தினர் ஒன்றுகூடி முயல் வேட்டை திருவிழாவை பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர். ஆனால் தென் தமிழகத்தில் இந்த விழா கொண்டாடும் நாட்கள் போலன்றி தை மாதத்தில் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் சங்கராந்தி தினத்தின் போது நடத்தப்படுகிறது. இங்குள்ள மாரியம்மனை வேண்டிக் கொண்டு, ஆண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் முயல் வேட்டைக்கு அதிகாலையிலேயே அருகாமையிலுள்ள வேப்பம்பட்டி, தீர்த்தமலை காப்புக்காடுகளுக்குக் கிளம்பிச் செல்கின்றனர். (பண்டைய நாட்களில் வனங்களில் மரத்தின் மீது குடிலமைத்து தங்கி முயல்கள் பிடிப்பது நடந்து வந்ததாகவும் தற்போது அவ்வாறில்லாமல் வேட்டையாடும் தினத்தை முடிவு செய்து அதிகாலையில் வனத்திற்குள் செல்வதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகின்றனர். மரத்தின் மீது பரண் வீடமைத்து அங்கு தாங்கள் வேட்டையாடிய விலங்குகளைக் கொண்டுவந்து அங்கேயே இறைச்சியாக்கி கடவுளருக்கு படைக்கும் பழக்கம் திருநெல்வேலி பகுதிகளில் இன்றும் உள்ளது). குடுமியாம்பட்டி மக்கள் பாரிவேட்டையை “பாடிவேட்டை” என்று இன்றும் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். திருநெல்வேலி, பெரம்பலூர் மாவட்டங்களில் இதுபோல காட்டுக்கு வேட்டைக்குச் செல்வோர் குத்தீட்டி, இரும்புக்கம்பிகள், உருட்டுக்கட்டைகள் போன்றவைகளை எடுத்து செல்வதும் உடன் வேட்டை நாய்களைக் கூட்டிச் செல்வதும், இரவு முழுவதும் வேட்டையாடுவதும் வழக்கம். ஆனால் இங்கு, வலை விரித்து முயல்கள் பிடிக்கப்படுகின்றன. பிடிபட்ட முயல்களை சாயங்கால வேளையில் ஊருக்குள் கொண்டுவந்து அங்குள்ள மாரியம்மன் கோயில் திடலில் உள்ள நூறாண்டு பழமையான ஆலமரத்தடியில் வைக்கின்றனர்.  மாரியம்மன், வேடியப்பன் முதலான கடவுளர்களை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வருகையில் கிராமத்துப் பெண்கள் பொங்கல் வைத்து சாமிக்குப் படையலிடுகின்றனர். அப்போது பிடிபட்ட முயல்களை மாலைகள் அணிவித்து பூசைகள் நடத்தியபின் ஊராருக்கு காண்பித்து கடவுளர்களை  சுற்றிவந்து காணிக்கை அளிப்பது போல வழிபாடுகள் நடத்தப்பட்டு பின்னர் முயல்களை காட்டுக்குள் விட்டுவிடுகின்றனர்.  
காணிக்கை செலுத்துதல் 

முயலை காட்டிற்குள் விடுதல் 

தங்கள் நிலங்களில் உள்ள பயிர்களை காட்டு விலங்குகள் அழிக்க வரும்போது அவைகளைப் பொறிவைத்து பிடித்தழிப்பதும், கூட்டமாகக் காட்டிற்குள் சென்று காட்டுவிலங்குகளை வேட்டையாடி அழிப்பதும் பண்டைய நாட்களில் வழக்கமாக இருந்தது. அதன் தொடர்ச்சியே இதுபோன்ற நிகழ்வுகள். சமீபகாலமாக, வனத்துறையினரின் கடுமையான எச்சரிக்கைகள் காரணமாக, முயல்வேட்டை அல்லது பாரிவேட்டைகள் வெகுவாக குறைந்துவிட்டன. இருப்பினும் விலங்குகளை உயிருடன் கொண்டுவந்து கடவுளர்களுக்குப் படைக்கப்பட்டு பின் அவைகளை மீண்டும் காட்டிற்குள் விட்டுவிடுவதான நிகழ்வுகள் நமது பாரம்பரியமான திருவிழாக்களில் நடைபெறும் பண்பாட்டு மாற்றம் என்றே கொள்ளவேண்டும்.

நன்றி:
இந்த கட்டுரை ஆக்கத்திற்கு உதவியவை 
புகைப்படங்கள் -புதிய தலைமுறை 
உங்கள் நூலகம் ஏப்ரல் 2014 இதழில் வெளியான கட்டுரை - "செவ்வியல் இலக்கியம், தொல்குடி மரபும் தொடர்ச்சியும் (வேட்டை, விருந்து) - கோ. சதீஸ் 
தினகரன் சேலம் பதிப்பு 16-04-2018 
தினமலர் மதுரை பதிப்பு 01-08-2010
தினமலர் 14-12-2012 "மகா சிவராத்திரியில் பாரிவேட்டைக்கு தடை"  
தினமலர் சென்னைப் பதிப்பு 17-4-2017



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக