ஞாயிறு, 9 டிசம்பர், 2018

தருமபுரி மாவட்டத்தில் தொல்பழங்காலத் தடயங்கள் உள்ள இடங்கள்


தருமபுரி, நல்லம்பள்ளி ஒன்றியதிற்குட்பட்டப்  பகுதி அதியமான்கோட்டை. இன்று அதமங்கோட்டை என்று பேச்சு வழக்கில் சொல்லபடும் இந்த இடத்தில், தருமபுரியாய் இன்றிருக்கும் அன்றைய தகடூரை ஆட்சி செய்த நுளம்ப மன்னன் மகேந்திரன் ஆட்சி காலத்தில் மயீந்தீஸ்வரம் உடையார் கோவில் என்றழைக்கப்பட்ட கோவில் இன்று சோமேஸ்வரர் கோவில் என்று அழைக்கபப்டுகிறது. இந்த் கோவில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என்பது வரலாற்றாய்வாளர்கள் கருத்து. இந்த ஆலயத்தின் வாயிலில்  சில மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அழகிய வேலைப்பாடு கொண்ட புடைப்புச் சிற்பம் யாவரும் வியக்கும் வண்ணம் உள்ளது.  இந்தக் கல்வளைவில் மூன்று வரிசை வேலைப்பாடுகள் உள்ளன. மேல் வரிசையில் சூலம் போன்ற அமைப்புகளும், இடைவரிசையில் பூ வேலைப்பாடுகளும் கீழ் வரிசையில் நுணுக்கமான் சிற்ப வடிவங்களும் வடிவமைக்கப்பட்டு ள்ளன.
சுமார் 3 அடி உயரம் உள்ள கல் வளைவு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை “சூரிய சந்திரக்கல்” என்று குறிப்பிடுகிறார்கள். இந்த (சூரிய வளைவு) சிற்பத்தைக் கொண்டு நாள்தோறும், வளைவின் ஊடே சூரியஒளி ஊடுருவி வெளியேறும்போது ஏற்படும் நிழலின் நீளத்திற்கேற்ப காலை, மாலை என நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு ஆதாரமில்லை. இந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கம் (சோமேஸ்வரர்) மேற்குதிசை நோக்கி உள்ளதால், ஒரு குறிப்பிட்ட நாளில் மேற்திசையில் தோன்றும் நிலவின் ஒளி கல் வளையத்தை ஊடுருவி  கோவில் உள்ளே உள்ள சிவலிங்கத்தின் மீது படும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.  
இத்தகைய வளைவுகள் திருநாவலூரிலும், திருஈங்கோய்மலையிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆதாரம்:
தகடூர் வரலாறும் பண்பாடும்  - இரா. இராமகிருட்டிணன், ராமையா பதிப்பகம், சென்னை
தருமபுரி (தகடூர் நாட்டுத் தகடூர்) மண்ணும் மக்களும் -  பேரா. த. பழமலை, பெருமிதம் வெளியீடு.
தருமபுரி மாவட்ட திருக்கோவில்கள் வழிகாட்டி - இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு
தினகரன் – நாளிதழ் 25-05-2015 சேலம் பதிப்பு பக்கம்:09


சூரிய சந்திரக்கல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக