திங்கள், 17 டிசம்பர், 2018

முத்தம்பட்டி ஆஞ்சநேயர் திருக்கோயில்


முத்தம்பட்டி ஆஞ்சநேயர் திருக்கோயில்:

            
  
    
     தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை ஒட்டி உள்ள பாகல்பட்டி கிராமத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் வே.முத்தம்பட்டி என்ற கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது வீரஆஞ்சநேய சுவாமி திருக்கோயில். தருமபுரி – சேலம் மார்க்கமாகச் செல்லும் இருப்புப்பாதையை ஒட்டி உள்ள மலையில் அமைந்துள்ள சுமார் எழுபது அடி உயரமுள்ள ஒரு பாறையில் எட்டு அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்கோயிலுக்கு கோபுரமோ மண்டபமோ  ஏதும் இல்லை. ஆஞ்சநேயர் திறந்தவெளியில் உள்ளார். ஆஞ்சநேயரின் புடைப்பு சிற்பத்திற்கு மேல் புறம், ஒரு சிறு மண்டபம் உள்ளது. அதில் இராமர், லக்குமணன், சீதாபிராட்டி ஆகியோரது நின்ற நிலையில் உள்ள திருவுருவங்களை  அனுமன் வழிபாடு செய்வது போல சுதை சிற்பங்கள் உள்ளன.
ஆஞ்சநேயர் கோயில் உள்ள பாறையை ஒட்டி ஒரு சிற்றோடை ஓடுகிறது.
ஆடி பதினெட்டு, அனுமன் ஜெயந்தி திருவிழா, ஆடி அமாவாசை, தமிழ் மற்றும் தெலுங்கு வருடப் பிறப்பு, மாதந்திர அமாவாசை, வார சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் செய்து வழிபடுகின்றனர். அன்னதானமும் முக்கிய தினங்களில் நடைபெறுகிறது. பெங்களூரு – சேலம் மார்க்கமாக செல்லும் பாசஞ்சர் ரயில் வே.முத்தம்பட்டி ஸ்டேசனில் நிற்கிறது. இங்கிருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரத்தில் இக்கோயில் உள்ளது. பாகல்பட்டி கிராமத்தைக் கடந்து வனப்பகுதியில் அமைந்துள்ள சாலை பராமரிப்பின்றி இருப்பதால் குண்டும்குழியுமாக வாகனங்களில் செல்வது சற்றுக் கடினமாக உள்ளது. நல்லம்பள்ளியிலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல ஆட்டோ, மினிபஸ் வசதி உள்ளது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக