செவ்வாய், 4 டிசம்பர், 2018

ஜம்பை கல்வெட்டு

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோயிலூருக்கு அருகில்  சும்மார் 16 கி.மீ. தொலைவில் தென்பெண்ணையாற்றின் கரையோர கிராமம் ஜம்பை. இது பண்டையகாலத்தில் வாணகோப்பாடி என்று கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. இந்த கிராமத்தை ஒட்டி ஆள்ஏறாப்பாறை, சன்யாசிமடம், தாசிமடம், குகைகள் என பல குன்றுகள் உள்ளன. அதில், தாசிமடம் என்றழைக்கப்படும் குன்றில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆய்வுத்துறையினரால்  கண்டுபிடிக்கப்பெற்ற “சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி” என்ற பிராமி  கல்வெட்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக உள்ளது.  இந்த கல்வெட்டு கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 
தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் அதியர் பரம்பரை. அவர்களில் முக்கியமானவர் அதியமான் நெடுமான் அஞ்சி. இவர் திருக்கோயிலூர் அருகே மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக்காரியை வென்று அவனது தலைநகரான திருக்கோயிலூரை கைப்பற்றினார் என்று சங்கப் பாடல்கள் கூறுகிறது. அந்தத் திருக்கோயிலூருக்கு அருகே கிடைக்கப்பெற்ற இந்த கல்வெட்டின் மூலம், அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது, சமணர்களுக்காக பாளியை (சமணர்களுக்கான கற்படுக்கை) ஏற்படுத்திக் கொடுத்ததை கல்வெட்டாகப் பொறித்து வைத்திருக்கிறான் என்பது இந்தக் கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் என்றும் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத நாட்டை ஆண்ட மௌரிய பேரரசன் அசோகரது கல்வெட்டில் காணப்பெறும் “சத்யபுத்ரர்” என்பது அதியமான் நெடுமான் அஞ்சியே என்பதும் வரலாற்றாய்வாளர்களின் கருத்து. பௌத்த மதத்தை தழைக்கச் செய்ய  தன் ஆட்சி எல்லைக் கடந்து தனி ஆட்சி செழுத்திய அனைத்து நாடுகளிலும் வகை செய்தான். அதனாலேயே அனைத்து மதங்களையும் போற்றிய சேர,சோழ, பாண்டியர்களோடு நெடுமான் அஞ்சியையும் தன் கல்வெட்டில் பொறித்து  வைத்துள்ளான். அதியமானை “பொய்யா எழுனி” (சத்திய புத்திரர்) என்று புறநானூறு கூறுவதை இதற்கு சான்றாக கொள்ளமுடியும்.


ஜம்பை கல்வெட்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக